கோலாலம்பூர், ஜன 3- மது போதையில் இருந்ததாக நம்பப்படும் ஆசாமி நீர் சேகரிப்பு குளத்தில் மூழ்கி மரணமடைந்தார். இச்சம்பவம் ரவாங் அருகே உள்ள பத்து ஆராங் தாசேக் புத்ரி சென்ட்ரல் பாரக்கில் நேற்று நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து நேற்று காலை 10.26 மணியளவில் தமது துறை புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குநர் டத்தோ நோராஸாம் காமீல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பத்து ஆராங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது. காலை 10.00 மணியளவில் 9 மீட்டர் நீளமும் 9 மீட்டர் அகலமும் கொண்ட அந்த குளத்தில் ஆடவர் ஒருவர் குதித்து விட்டதாக அங்கிருந்த போலீசார் தமது தரப்புக்கு தகவல் தெரிவித்தது என்றார் அவர்.
தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் பிற்பகல் 1.33 மணியளவில் அந்த குளத்தின் சுமார் 3 மீட்டர் ஆழத்தில் அந்த ஆடவரின் உடலைக் கண்டனர் என்று அவர் சொன்னார்.
அந்த ஆடவரின் உடல் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.






