ஷா ஆலம், ஜன 1- இந்த புத்தாண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் தேர்வுக்குரிய இடமாக சிலாங்கூர் தொடர்ந்து விளங்குவதை டூரிசம் சிலாங்கூர் உறுதி செய்யும்.
இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ள 60 லட்சம் வெள்ளி மற்றும் பொருளாதார மீட்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 11 கோடியே 46 லட்சம் வெள்ளியைக் கொண்டு பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டங்களை தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக டூரிசம் சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி அஸ்ருள் ஷா முகமது கூறினார்.
தற்போது அமலில் உள்ள “நாக் பெர்சூத்தி“, ^பூசிங் சிலாங்கூர் டூலு“, “ஸ்பெலண்டிட் சிலாங்கூர்“,“டேக் மீ எனிவேர்“ போன்ற திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தும் அதே வேளையில் அனைத்துலக சுற்றுலா உக்குவிப்பு நடவடிக்கைகளும் மேம்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஆக்ககரமான வணிக வியூகங்களையும் புதிய அணுகுமுறைகளையும் கொண்ட சுற்றுலா துறையினருடனான ஒத்துழைப்பையும் டூரிசம் சிலாங்கூர் வலுப்படுத்தும் என அவர் சொன்னார்.
அதோடு மட்டுமின்றி இவ்வாண்டு நடைபெறவுள்ள 2023 அனைத்துலக டூரிசம் சிலாங்கூர் மாநாட்டில் சுற்றுப்பயணிகளுக்கு வணிக வாய்ப்பை வழங்கும் கோட்பாட்டுடன் கூடிய கண்காட்சிக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார் அவர்.
சிலாங்கூரை வரும் 2025ஆம் ஆண்டிற்குள் விவேக மாநிலமாகவும் வசிப்பதற்கு உகந்த இடமாகவும் உருவாக்குவதை இலக்காக கொண்ட முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் முன்னெடுப்புகளுக்கு ஏற்ப இந்த திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டப் பின்னர் சிலாங்கூருக்கு 1 கோடியே 2 லட்சம் சுற்றுப்பயணிகள் வருகை புரிந்துள்ளனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இது அதிக எண்ணிக்கையாகும்.








