ஷா ஆலம், டிச 30- மண் அமிழ்வு காரணமாக பாதிக்கப்பட்ட தாமான் கிராமாட், ஏயு3 சாலை நேற்றிவு சீரமைக்கப்பட்டு குத்தகையாளரின் கண்காணிப்பின் கீழ் வாகனப் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதியில் குழாய்களைப் பதிக்கும் பணி முற்றுப் பெற்றப் பின்னர் அச்சாலையை முழுமையாகச் சீரமைத்து பழைய நிலைக்கு கொண்டு வரும் பணி மேற்கொள்ளப்படும் என்று அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் நிலத்திற்கு அடியில் குழாய்களைப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட போது மேற்பகுதி உறுதியற்று மண் அமிழ்வு ஏற்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த மண் அமிழ்வினால் வாகனமோட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அங்கு ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக சரி செய்யும்படி சம்பந்தப்பட்ட பகுதியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் ஷரிகாட் புஞ்சாக் நியாகா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது என்றார் அவர்.
இந்த மண் அமிழ்வு சம்பவம் தொடர்பில் முழு அறிக்கையை நகராண்மைக் கழகத்திற்கு சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.






