கோலாலம்பூர், டிச 29- சபா மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில்
வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி அவ்விரு
மாநிலங்களிலும் தலா ஒரு துயர் துடைப்பு மையம் மட்டுமே செயல்பட்டு
வருகிறது. அதே சமயம், கிளந்தானில் அனைத்து நிவாரண மையங்களும்
மூடப்பட்டு விட்டன.
திரங்கானு மாநிலத்தின் பெசுட், கம்போங் லா பள்ளிவாசலில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் இன்னும் தங்கியுள்ளதாக மாநில வெள்ள பேரிடர் செயல்குழு கூறியது.
வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட காரணத்தால் அவர்கள்
அனைவரும் நீண்ட நாட்களாக இந்த துயர் துடைப்பு மையத்தில்
தங்கியுள்ளதாக அது தெரிவித்தது.
இதனிடையே, சபாவில் கடல் பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்டு துயர்
துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியவர்களின் எண்ணிக்கை 688
ஆக குறைந்துள்ளது. சண்டகான் சங்கை ஆனிப் 2 பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். நேற்று மாலை மொத்தம் 1,454 பேர் இங்கு தங்கியிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
கிளந்தான் மாநிலத்தில் செயல்பட்டு வந்த ஒரே துயர் துடைப்பு மையமும்
நேற்று மாலை மூடப்பட்டது. பாசீஸ் மாஸில் உள்ள அந்த துயர் துடைப்பு
மையத்தில் அடைக்கலம் நாடியிருந்த 17 பேரும் வீடு திரும்பியதைத்
தொடர்ந்து அம்மையம் நேற்று மாலை 6.15 மணியளவில் மூடப்பட்டது.







