புத்ராஜெயா, டிச 19- தற்போது நிலவி வரும் பருவ மழை இம்மாதம் 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தீபகற்ப மலேசியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கிழக்கு சபாவிலும் தொடர் மழையும் பலத்த காற்று வீசும் என்பதோடு கடலில் பேரலைகளும் ஏற்படும் சாத்தியம் உள்ளது.
இந்த வானிலை காரணமாக தென் சீனக் கடலில் பேரலைகள் ஏற்படும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையிடமிருந்து நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் பெற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சபா,சரவா மற்றும் சிறப்பு விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமது அலி கூறினார்.
இதன் காரணமாக பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரங்கானு, பகாங் மற்றும் ஜோகூரில் இம்மாதம் 21ஆம் தேதி வரை தொடர் மழை பெய்யும் என்பதோடு வரும் டிசம்பர் 22 வரை தென் சீனக் கடல் பகுதியில் கடல் சீற்றமும் பேரலைகளும் ஏற்படும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது என அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து நட்மாவினால் ஒருங்கிணைக்கப்படும் பேரிடர் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையம் நேற்று காலை தொடங்கி செயல்படத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்றிரவு 8.40 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 3,081 குடும்பங்களைச் சேர்ந்த 10,347 பேர் வெள்ளத்தில் பாதிக்கப் பட்டுள்ளதாக சமூக நலத்துறையின் அகப்பக்கம் கூறியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக திரங்கானு, பேராக், கிளந்தான், ஜொகூர், சரவா, பகாங் ஆகிய மாநிலங்களில் 149 தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.







