கோலாலம்பூர், டிச 18- பத்தாங் காலியில் உள்ள ஃபாதர் ஆர்கானிக் ஃபார்ம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை தேடி மீட்கும் நடவடிக்கையில் உதவுவதற்காக இராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களைத் ஈடுபடுத்தும் பணியில் மலேசிய ஆயுதப்படை ஈடுபட்டு வருகிறது.
இந்த மீட்புப் பணியில் உதவுவதற்காக அரச மலாய் இராணுவத்தின் 25வது பட்டாளத்தை சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் 30 வீரர்கள் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு 6 ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறையும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்படுவதாக தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
இதனிடையே, நேற்று முன்தினம் முதல் வீரர்களும் தளவாடங்களும் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தரைப்படையின் மேற்கு கள ஆணை முகாம் பேஸ்புக் வழி தெரிவித்தது.
அவர்கள் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, அரச மலேசிய போலீஸ் படை மற்றும் ரேலா உறுப்பினர்களுடன் இணைந்து மீட்பு பணியை மேற்கொள்வர் என அந்த பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கோ தோங் ஜெயா அருகில் உள்ள பொழுதுபோக்கு முகாம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 94 பேர் பாதிக்கப்பட்டனர்.







