உலு சிலாங்கூர், நவம்பர். 16- உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் சத்யபிரகாஷ் நடராஜனுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது.
இன்று காலை பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உலு சிலாங்கூரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அவரின் வருகையை தொடர்ந்து அத்தொகுதி முழுவதும் reformasi எழுச்சி சுலோகத்தை மக்கள் முழக்கமிட்டனர்.
உலு சிலாங்கூருக்கு டாக்டர் சத்யபிரகாஷ் புதியவர் அல்ல. இங்கேயே பிறந்து வளர்ந்து, படித்து தனது மக்களுக்காகவே சேவையாற்றி வரும் ஒரு உன்னத மனிதர்.
அவருக்கு வெற்றியை தராமல் வேறு யாருக்கு தர முடியும்.
தன்னுடைய மருத்துவ குழுக்களை கொண்டு பல்வேறு உதவிகளை உலு சிலாங்கூர் முழுவதும் அவர் செய்து வருகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் இங்குள்ள மக்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு பிளவு படாத ஆதரவை வழங்கினார். அதே போன்று இம்முறையும் ஆதரவை வழங்கினால் புதிய மலேசியாவை உருவாக்க முடியும் என டத்தாரான் செரண்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
இத்தொகுதியில் வாழும் பூர்வக் குடியினரை பக்காத்தான் ஹராப்பான் ஒருபோதும் மறந்ததில்லை. இங்கு போட்டியிடும் டாக்டர் சத்யபிரகாஷ் பூர்வ குடியினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்.
அவர்களின் பிரச்சினைகளை கேட்டு நேரில் சென்று உதவி வருகிறார். எனவே இம்முறையும் உலு சிலாங்கூர் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறும் என்று அன்வார் பேசினார்.
மக்களுடனான இச்சந்திப்பில் தொகுதி வேட்பாளர் டாக்டர் சத்யபிரகாஷ், சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும் கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உட்பட ஆயிரக் கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.
ஆர்.பார்த்திபன்







