ஷா ஆலம், நவ 6- பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஷா ஆலம் நகரில் மருத்துவ வசதிகளை அதிகரிக்கவுள்ளதாக ஷா ஆலம் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் அஸ்லி யூசுப் கூறினார்.
மக்கள் தொகை அதிகம் உள்ள காரணத்தால் இந்நகரில் கூடுதல் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை தாம் பெற்று வருவதாக அவர் சொன்னார்.
இந்நகரிலுள்ள செக்சன் 7 மற்றும் செக்சன் 19 ஆகிய இடங்களில் மட்டும் சுகாதார கிளினிக்குகள் உள்ளன. இதனை அதிகரிப்பதற்கான கோரிக்கையை நான் முன்வைப்பேன் என்று நேற்று இங்கு நடைபெற்ற வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
மாநகரின் அந்தஸ்துக்கேற்ப ஷா ஆலம் வளர்ச்சியில் யாரும் பின்தங்கிவிடாமலிருப்பதை உறுதி செய்ய தாம் விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் தரப்பினர் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவினப் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தாம் குரல் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் இஷாம் ஜாலில், பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் அலிப் பஹாருடின் மற்றும் பெஜூவாங் வேட்பாளர் ராபிக் ரஷிட் ஆகியோரை அஸ்லி எதிர்கொள்கிறார்.








