ஷா ஆலம், அக் 31- சிலாங்கூர் மாநிலம் எப்போதும் தூய்மையாகவும் சுபிட்சத்துடனும் காணப்படுவதை உறுதி செய்ய பல்வேறு தரப்பினர் தங்கள் பகுதிகளில் ஏற்பாடு செய்யும் துப்புரவு இயக்கங்களில் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் (கே.டி.இ.பி.எம்.டபள்யு.) நிறுவனம் பங்கேற்கும்.
தேசிய தூய்மைக் கொள்கை மற்றும் நீடித்த மேம்பாட்டு இலக்கை அடைய மாநிலம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உதவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தங்களின் பங்கேற்பு அமைவதாக அந்நிறுவனம் கூறியது.
பல்வேறு தரப்பினர் ஏற்பாடு செய்யும் துப்புரவு இயக்கங்களில் பங்கேற்பதன் மூலம் உயர்ந்த பட்ச தூய்மை சேவையை வழங்குவதை எங்கள் நிறுவனத்தின் அனைத்து கிளைகளும் கடப்பாடு கொண்டுள்ளன என்று அது தெரிவித்தது.
உலு லங்காட், பண்டார் ரிஞ்ங்கில் ஏடிஸ் கொசு ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட துப்புரவு இயக்கத்தில் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெதண்ட் நிறுவனத்தின் சுபாங் ஜெயா கிளை பங்கேற்றது.
பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தலைமையில் நடைபெற்ற இந்த துப்புரவு இயக்கத்தில் கும்புலான் டாருள் ஏசான் சார்பில் 12 பணியாளர்கள் பங்கேற்றதோடு குப்பைகளை அகற்றுவதற்கு இரண்டு தோம்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இது தவிர சுங்கை குயோ ஆற்றைச் சுத்தப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட குப்பை அகற்றம் பணியில் காஜாங் கிளையைச் சேர்ந்த ஊழியர்களும் பங்கு கொண்டனர்.







