கிள்ளான், ஜூலை 10- சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் வாய்ப்புகளை இந்திய தொழில்முனைவோர் அறிந்து கொள்ளும் வகையில் சிலாங்கூர் இந்திய வர்த்தக ஆய்வரங்கு வரும் ஆகஸ்டு மாதம் நடத்தப்படும்.
இந்திய தொழில் முனைவோரின் மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கிலான இந்த ஆய்வரங்கு யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
பெரும்பாலான இந்தியர்கள் இந்திய தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) மற்றும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்) போன்ற மாநில அரசின் திட்டங்கள் பற்றி மட்டுமே அறிந்துள்ளனர்.
எனினும், மேலும் பல திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி படுத்தி வருவதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். புதிதாக வணிகத்தை தொடக்குவதற்கு 100,000 வெள்ளி வரையிலான கடனுதவி உள்ளிட்ட பல உதவித் திட்டங்கள் உள்ளன. அத்திட்டங்கள் குறித்து அந்த ஆய்வரங்கில் தெளிவாக விளக்கப்படும் என அவர் சொன்னார்.
இங்குள்ள செந்தோசா தொகுதி சேவை மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மலேசிய இந்திய சமூகத்தின் மேம்பாட்டு வடிவமைப்பு இலக்கை தீர்மானிப்பது மீதான நிகழ்வின் சுருக்கம் தொடர்பில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவும் கலந்து கொண்டார்.
தொடக்க கட்டமாக இந்த ஆய்வரங்கில் 200 இந்திய தொழில்முனைவோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக குணராஜ் கூறினார். ஆய்வரங்கிற்குப் பின்னர் மாநில அரசினால் வழங்கப்படும் வாய்ப்புகளை நேரில் அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.








