ECONOMY

கிளானா ஜெயா எல்.எல்.ஆர். சேவை வெ.80 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்- அமைச்சர்

26 மே 2022, 10:21 AM
கிளானா ஜெயா எல்.எல்.ஆர். சேவை வெ.80 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்- அமைச்சர்

புத்ரா ஜெயா, மே 26- கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் இலகு ரயில் (எல்.ஆர்.டி.) சேவை மேற்கொள்ளப்பட்டு வரும் கிளானா ஜெயா தடத்தில் 80 கோடி வெள்ளி செலவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த புதுப்பிப்பு பணி 808 ரகத்திலான 28 செட் இரயில் பெட்டிகளையும் உள்ளடக்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.

அந்த தடத்தில் அடிக்கடி ஏற்படும் தடங்கல் மற்றும் அதனால் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

கிளானா ஜெயா தடத்தில் நான்காம் கட்ட மத்திய ஆயுள்கால புதுப்பிப்பு பணிகளை அதாவது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு காலம் கனிந்து விட்டது. நடப்பிலுள்ள இரயில்கள் 14 முதல் 15 ஆண்டுகள் வரை பழைமையானவையாகும். சம்பந்தப்பட்ட இரயில்களின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதற்கும் இப்பணிகளை மேற்கொள்வது அவசியமாகிறது என்று அவர் கூறினார்.

கிளானா ஜெயா தடத்தில் பயன்படுத்துவதற்காக 19 புதிய ரக இரயில்களை அடுத்தாண்டு தொடக்கத்தில் அரசாங்கம் தருவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிகவும் பரபரப்புமிக்க தடமாக விளங்கும் இந்த கிளானா ஜெயா தடத்தை தினசரி சுமார் 350,000 பயணிகள் பயன்படுத்தும் நிலையில் எம்.ஆர்.டி. முதல் கட்டத் திட்டத்தின் புத்ரா ஜெயா தடத்திற்கான சேவை வரும் ஜூன்  16 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டப் பின்னர் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த தடத்தில் கடந்த மே 2 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக நான்கு இரயில் பழுது சம்பவங்கள் பதிவாகிவுள்ளதாக கூறிய டாக்டர் வீ, அவசர பிரேக் மற்றும் பிரேக் சாதனங்களில் ஏற்பட்ட பழுதே இந்த தடங்கலுக்கு காரணமாகும் என்றார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.