சுபாங் ஜெயா, மே 8- இங்குள்ள தாமான் ரிக்ரியாசி வாவாசான் பூச்சோங்கில் இன்று நடைபெற்ற 2022 சமூக கலை விழாவில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி நாடு எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்திற்கு மாறியப் பின்னர் முதன் முறையாக நடத்தப்படும் இந்த நிகழ்வுக்கு கிடைத்துள்ள ஆதரவு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளதாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
கடந்த ஈராண்டுகளாக நாம் எந்த நிகழ்வையும் நடத்தாமலிருந்தோம். இன்று மிகவும் விரிவான அளவில் நடத்தப்பட்ட இந்த கலை விழாவில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர் என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் சுமார் 50 வணிகர்களும் கலந்து பல்வேறு பொருள்களை விற்பனை செய்தனர். இதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதற்குரிய வாய்ப்பும் கிட்டியது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் கலை நிகழ்ச்சி, கண்காட்சி, புகைப்படப் போட்டி, சிறார்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, பூச்சோங்கின் வரலாற்றைச் சித்தரிக்கும் கண்காட்சி ஆகியவையும் இடம் பெற்றன.







