ஷா ஆலம், அக் 11-கோவிட்-19 தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபட்ட லெம்பா சுபாங்கை சேர்ந்த 200 பேர் தடுப்பூசி பெறுவதற்கு ஸ்ரீ செத்தியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் உதவ முன்வந்துள்ளார்.
பெட்டாலிங் மாவட்ட சுகாதார இலாகாவின் ஒத்துழைப்புடன் இந்த தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேரமின்மை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமை போன்ற காரணங்களால் லெம்பா சுபாங் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பலர் இன்னும் தடுப்பூசி பெறவில்லை என்ற புகார் கிடைக்கப்பெற்றதன் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த இயக்கத்தின் போது அந்த 200 பேருக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார் அவர்.
ஆரா டாமன்சாராவிலுள்ள என்.இஸட்.எக்ஸ். வர்த்தக மையத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.








