ஷா ஆலம், அக் 8- சுங்கை சிலாங்கூர் இரண்டாம் கட்ட நீர் சுத்திகரிப்பு மையத்தில் அடுத்த வாரம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் போது நீர் விநியோக பாதிப்பை எதிர்நோக்கும் பொதுமக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படுவர்.
பொதுமக்களுக்கு நீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் பணியில் அந்த தன்னார்லவர்கள் ஈடுபடுவர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
டீம் சிலாங்கூர், செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு, பி.இ.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் இளைஞர் செயலாக்க அமைப்பு மற்றும் கிராமத் தலைவர்களை உள்ளடக்கிய இந்த தன்னார்வலர்கள் தொகுதி நிலையில் சேவையை வழங்குவர் என்று அவர் சொன்னார்.
மருத்துவமனைகள், டயாலிசிஸ் மையங்கள், நல்லடக்கச் சடங்கு மையங்களின் நீர் தேவைக்காக 105 லோரிகளில் நீர் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தவிர 18 இடங்களில் பொது குழாய்களும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு நான்கு நீர் நிரப்பும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் காரணத்தால் இம்மாதம் 13 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 16 ஆம் தேதி 9.00 மணி வரை 998 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நீர் விநியோகத் தடையினால் பெட்டாலி, கிள்ளான்/ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோல லங்காட், கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோக தடை ஏற்படும்.








