புத்ரா ஜெயா, செப் 8- நாடு முழுவதும் உள்ள வாகனமோட்டும் பயிற்சி பள்ளிகள் நாளை வியாழக்கிழமை முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
தேசிய மீட்சித் திட்ட அமலாக்க காலத்தில் வழங்கப்படும் இந்த அனுமதி வருகைக்கான முன்பதிவை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அவர் சொன்னார்.
வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளிகள் நாளை முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டாலும் வாகனமோட்டும் சோதனைகளை இம்மாதம் 17 ஆம் தேதிக்குப் பின்னரே மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளிகளும் ஜே.பி.ஜே. எனப்படும் சாலை போக்குவரத்து இலாகாவும் முழு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்டவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எதிர்பாராமல் எழக்கூடிய பிரச்னைகள் காரணமாக பயிற்சி பெறும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாவதை இதன் மூலம் தவிர்க்க முடியும் என்றார் அவர்.
தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வாகனமோட்டும் பயிற்சி பள்ளிகள் செயல்பட தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயிற்றுநர்களும் பயிற்சி பெறும் மாணவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு பயிற்சிப் பள்ளி பணியாளர்களில் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற 40 விழுக்காட்டினர் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எண்பது விழுக்காட்டுப் பணியாளர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருக்கும் பட்சத்தில் 100 விழுக்காடு முழுமையாகச் செயல்பட பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.








