ECONOMY

சிலாங்கூரிலுள்ள 160 ஆலயங்களுக்கு 17 லட்சம் வெள்ளி மானியம்- கணபதி ராவ் தகவல்

4 செப்டெம்பர் 2021, 9:05 AM
சிலாங்கூரிலுள்ள 160 ஆலயங்களுக்கு 17 லட்சம் வெள்ளி மானியம்- கணபதி ராவ் தகவல்

ஷா ஆலம், செப் 3- சிலாங்கூரிலுள்ள 160 ஆலயங்களுக்கு 17 லட்சம் வெள்ளியை மாநில அரசு மானியமாக வழங்கியுள்ளது. முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக இவ்வாண்டில் ஒதுக்கப்பட்ட மானியத்தின் கீழ் அந்நிதி வழங்கப்படுகிறது.

இந்த மானியத் தொகை இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி கட்டங் கட்டமாக வழங்கப்படுவதாக சிலாங்கூர் மாநில பௌத்தம், கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு செயல்குழுவின் (லீமாஸ்) இணைத் தலைவர் வீ. கணபதி ராவ் கூறினார்.

முதல் கட்டமாக 63 ஆலயங்களுக்கு 630,000 வெள்ளி வழங்கப்பட்ட வேளையில் இரண்டாம் கட்டமாக 43 ஆலயங்களுக்கு 393,000 வெள்ளி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் இறுதிக் கட்ட நிதியளிப்பு நிகழ்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் 54 ஆலயங்களுக்கு 700,000 வெள்ளி மானியமாக வழங்கப்படும் என்று இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இந்த மானியத்தின் வழி தங்கள் வட்டாரத்தில் சமய மற்றும் சமூக நடவடிக்கைகளை குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டங்களை ஆலயங்களால் மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து சமயத்தினருக்கு மாநில அரசு ஆண்டுதோறும் மானியங்களை வழங்கி வருகிறது. ஆகவே, முஸ்லீம் அல்லாதோரிடம் மாநில அரசு பரிவு காட்டவில்லை என குற்றஞ்சாட்டுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றார் அவர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டுதோறும் பத்து லட்சம் வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இனங்களுக்கிடையை சமத்துவத்தை கடைபிடிக்கும் மாநில அரசின் கொள்கையை இது பிரதிபலிக்கிறது என அவர்  மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.