கோலாலம்பூர், ஆக 10- இவ்வாண்டு ஜூன் மாதம் நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 4.8 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக மலேசிய புள்ளி விபரத் துறை கூறியுள்ளது.
மொத்தம் 768,700 பேரை இந்த 4.8 விழுக்காடு உள்ளடக்கியுள்ளதாக அத்துறை வெளியிட்ட 2021 ஆம் ஆண்டின் ஜூன் மற்றும் இரண்டாம் காலாண்டிற்கான ஆள்பலம் மீதான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் வேலையில்லாதோர் எண்ணிக்கை 4.5 விழுக்காடாக அதாவது 728,100 ஆக இருந்ததாக மலேசிய புள்ளி விபரத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மாஹிடின் கூறினார்.
அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் போராடி வரும் வேளையில் அத்தியாவசிய பொருளாதார மற்றும் சேவைத் துறைகள் மட்டுமே செயல்படும் வகையில் கடந்த ஜூன் மாதம் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஆள்பலத் துறைக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சொன்னார்.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலையில் இருப்போரின் எண்ணிக்கை 0.5 விழுக்காடு குறைந்து 1 கோடியே 53 லட்சம் பேராக ஆனது. கடந்த மே மாதம் இந்த எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 70 ஆயிரம் பேராக இருந்தது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.








