ஷா ஆலம், ஜூன் 22- கடந்தாண்டு முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட 650 வசதி குறைந்த குடும்பங்களுக்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.
தலா 100 வெள்ளி மதிப்பிலான அந்த உணவுப் பொருள்கள் பி.ஜே. சிட்டி ஃபூட் பேங்க் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்புப் பிரிவு அறிக்கை ஒன்றில் கூறியது.
பெட்டாலிங் ஜெயா வட்டாரத்திலுள்ள 21 சமூக இல்லங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்பட்டதாக அது தெரிவித்தது.
கோவிட்-19 பெருதொற்று பொது மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தரப்பினரில் பலர் இக்காலக்கட்டத்தில் வேலையை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகவே, மாதம் 1,500 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெரும், அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை இலக்காக கொண்டு இந்த உதவி வழங்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியது.
இது தவிர, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு உள்ளான மற்றும் நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் 82 பணியாளர்களுக்கும் நிதியதவி வழங்கப்பட்டது.
எஸ்.பி.எம். தேர்வில் 5ஏ மற்றும் அதற்கு மேல் பெற்ற மாநகர் மன்றத்தினால் தத்தெடுக்கப்பட்ட ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த பி40 பிரிவினரின் பிள்ளைகளும் வெகுமதி வழங்கி சிறப்பிக்கப்பட்டனர் என அந்த அறிக்கை மேலும் கூறியது.








