ஷா ஆலம், ஜூன் 16- பொதுமக்கள் கோவிட்-19 தடுப்பூசியை பொறுவதை உறுதி செய்வதற்காக தொகுதிகளுக்கு நேரடியாக செல்லும் அணுகுமுறையைக் கடைபிடிக்கும்படி அரசாங்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நடவடிக்கையின் வாயிலாக தடுப்பூசிக்கான பதிவு நடவடிக்கையை விரைவுபடுத்த முடியும் என்பதோடு நோய்த் பரவலால் ஏற்படக்கூடிய மரண எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று அவர் சொன்னார்.
பொதுத் தேர்தலின் போது நாம் ஒவ்வொரு தொகுதிக்கும் செல்கிறோம். வாக்களிப்பதற்காக படுக்கையில் இருக்கும் நோயாளிகளையும் அழைத்து வர ஏற்பாடு செய்கிறோம்.
இப்போது தடுப்பூசி பதிவு நடவடிக்கை மந்தமாக உள்ளது. தலைவர்களுக்கே உரிய மக்களை குறைத்து மதிப்பிடும் போக்கு வந்து விட்டது. மக்கள் பதிந்து கொள்ளவில்லை என குறைகூறும் நாம் உண்மையில் நமது கடமையை முறையாக ஆற்றத் தவறிவிட்டோம் என்றார் அவர்.
அரசாங்கம் மைசெஜாத்ரா பதிவு நடவடிக்கைக்காக காத்திராமல் இணக்கம் தெரிவிப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
தடுப்பூசி வந்து விட்டாலும் பிரமுகர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மற்றவர்களுக்கு பல்வேறு காரணங்கள் மட்டும் கூறப்படுகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் முறை எளிதாக இருக்க வேண்டும். பதிவு செய்தவுடன் தடுப்பூசி செலுத்தி விட வேண்டும். தனியார் மருத்துவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதிக்கும்படி கடந்த மார்ச் மாதம் கேட்டோம். ஆனால் பலர் இறந்து கொண்டிருக்கும் நிலையில் பாரங்களை பூர்த்தி செய்யும் பணி மட்டும் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.








