ஷா ஆலம், ஜூன் 12- சமையல் எண்ணெயின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் கச்சா செம்பனை எண்ணெயின் விலையை இரு நிலைகளில் நிர்ணயிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இதன் வழி ஏற்றுமதிக்கான எண்ணெயை சந்தை விலையிலும் உள்நாட்டு தேவைக்கான எண்ணெயை குறைந்த விலையிலும் விற்க முடியும் என்று பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.
தற்போது அதிக விலையில் விற்கப்படும் 5 கிலோ சமையல் எண்ணெயை அனைத்து செலவுகளும் போக வெறும் 20 வெள்ளிக்கு விற்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
உலகில் மிகப்பெரிய கச்சா செம்பனை எண்ணெய் ஏற்றுமதி நாடாக மலேசியா விளங்குகிறது. 2 கோடியே 70 லட்சம் டன் எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வேளையில் 10 லட்சம் டன் எண்ணெய் மட்டுமே உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
உள்நாட்டு தேவைக்கான எண்ணெயை நம்மால் குறைந்த விலையில் விற்க முடியும். ஆனால், தற்போது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அந்த உணவு பொருளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
அனைத்து செலவினங்களையும் கருத்தில் கொண்டு உதவித் தொகை வழங்கப்படும் சமையல் எண்ணையின் விலையை நிர்ணயிக்க அரசாங்கம் சில்லறை விலை உருவாக்க முறையை அரசாங்கம் வழிகாட்டியாக கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்பு டன் ஒன்று 300 வெள்ளியாக இருந்த செம்பனை பழங்களின் விலை தற்போது ஆயிரம் வெள்ளியாக உயர்வு கண்டது சந்தையில் சமையல் எண்ணெய் விலையேற்றம் காண்பதற்கு காரணமாக அமைந்ததாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை துணையமைச்சர் கடந்த வாரம் கூறியிருந்தார்.








