ஷா ஆலம், ஜூன் 10- கோவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மக்களிடம் நோய்த் தொற்று தொடர்பான சோதனைகளை அதிகப்படுத்தும்படி அரசாங்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
திடீரென தோற்றும் நோய்த் தொற்றுகள் மற்றும் மரண எண்ணிக்கை உள்பட நோய்ப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது அமல் செய்யப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பயன்படுத்தி அதிகளவிலான கோவிட்-19 பரிசோதனை இயக்கங்களை மேற்கொள்ளலாம் என அவர் சொன்னார்.
பத்து முதல் முப்பது பேரிடம் மேற்கொள்ளப்படும் சோதனையில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதை கருத்தில் கொண்டு பரிசோதனை நவடிக்கைகளை இரட்டிப்பாக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நான் முன்வைக்கிறேன். கோவிட்-19 பரிசோதனைகளை குறைப்பதானது நோய்த் தொற்று பரவல் குறைந்து விட்டது என்று பொருள்படாது. உண்மையில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டதையும் உயிர்ப்பலிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதையும் இது காட்டுகிறது என்றார் அவர்.
பெரிய அளவில் பரிசோதனை இயக்கங்களை நடத்துவதன் மூலம் கோவிட்-19 நோய்ப்பரவல் தொடர்பில் உண்மை நிலையை நாம் கண்டறிய முடியும். நோய்த் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதன் மூலம் இந்நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.








