சைபர் ஜெயா, ஜூன் 7- சைபர் ஜெயாவிலுள்ள கைவிடப்பட்ட பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் அமலாக்க அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனையில் 156 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றிரவு 11.00 மணி தொடங்கி மூன்று மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் இந்தோனேசியா, மியன்மார், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 202 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஜைமி டாவுட் கூறினார்.
இருபத்து மூன்று வயதுக்கும் ஐம்பது வயதுக்கும் உட்பட்ட 12 பெண்கள் மற்றும் நான்கு வயதுக்கும் குறைவான இரு சிறார்களும் அவர்களில் அடங்குவர் என அவர் சொன்னார்.
செல்லத்தக்க ஆவணங்களைக் கொண்டிராத காரணத்திற்காக கைது செய்யப்பட்ட அவர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக புத்ரா ஜெயாவிலுள்ள கோவிட்-19 பரிசோதனை மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார் அவர்.
அந்த அந்நிய நாட்டினரின் குடியிருப்பு சட்டவிரோதமாக பெறப்பட்ட மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியைக் கொண்டிருந்ததோடு உணவகம், முடி திருத்தும் நிலையம் ஆகியவையும் அங்கு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று மாத காலமாக அப்பகுதியை அணுக்கமாக நோட்டமிட்டப் பின்னர் காவல் துறை, பொது தற்காப்பு பிரிவு, தேசிய பதிவுத் துறை, மனிதவளத் துறை ஆகியவற்றின் உதவியுடன் நேற்று இந்த இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, தமது தரப்பு முதலாளிகளை கைது செய்வது அல்லது நீதிமன்றத்தில் நிறுத்துவது போன்ற நடவடிக்கைளை மேற்கொள்ளாமல் சட்டவிரோத அந்நியக் குடியேறிகளை மட்டும் கைது செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ஜைமி மறுத்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் 1,059 முதலாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு 1 கோடியே 93 லட்சம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
கடந்தாண்டில் 130 முதலாளிகள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு ஒரு கோடி வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.








