கோலாலம்பூர், ஜூன் 4- தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு எதிராக மக்களை தூண்டி விடும் நடவடிக்கையில் அத்தரப்பினர் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து தாங்கள் ஆலோசித்து வருவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.
தடுப்பூசிக்கான பதிவு நடவடிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையாவிட்டால் தடுப்பூசித் திட்டத்தை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிக்கும்படி கோவிட்-19 விநியோக உத்தரவாத சிறப்புக் குழுவை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திட்டமிட்டபட அனைத்தும் நடந்தால் தடுப்பூசித் திட்டத்தை விரைந்து மேற்கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம். குறிப்பிட்ட சில தரப்பினர் தடுப்பூசி வேண்டாம் எனக் கூறி மக்களை குழப்பாமலிருப்பதுதான் இதில் முக்கியம் என்றார் அவர்.
நாட்டில் பாதி பேர் தடுப்பூசி பெற்றவர்களாகவும் எஞ்சியோர் தடுப்புசி பெறாதவர்களாகவும் இருப்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை. இதனால் நமது தடுப்பூசி இயக்கத்திற்கு எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்று அவர் மேலும் சொன்னார்.








