ஷா ஆலம், மே 31- கோவிட்-19 நோய்த் தொற்று சிகிச்சைக்காக அதிக எண்ணிக்கையிலானோர் மருத்துவமனைக்கு வரும் அதே வேளையில் நோய்த் தொற்றினால் உயிரிழந்த நிலையில் மருத்துவனைக்கு கொண்டு வரப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இம்மாதம் 1ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நோய்த் தொற்று காரணமாக வீட்டிலேயே மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 95ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது. இம்மாதம் 22ஆம் தேதி மட்டும் அத்தகைய 10 சம்பவங்கள் பதிவானதாக அது தெரிவித்தது.
இந்நிலை ஏற்படுவதற்கான மூன்று சூழல்களை சுங்கை பூலோ மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சித்தி சாரா ஆயிஷா சுஹாய்டி பகிர்ந்து கொள்கிறார்.
- காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கிளினிக்கிற்கு சென்று மருந்து எடுப்பது. ஆனால் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதில்லை. சில தினங்களில் அவர்களுக்கு வீட்டிலேயே மரணம் சம்பவிக்கிறது.
2.கோவிட்-19 நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் கிளினிக்குள் சுகாதார அமைச்சிடம் தகவல் தெரிவிக்கின்றன. தனிமைப்படுத்தும் மையம் அல்லது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுவதற்கு முன்பாகவே வீட்டில் மரணமடைவது.
- உணவின் சுவையை உணர முடியாமல் போவதோடு உடலும் களைப்படைவது. அந்த அறிகுறிகளை பொருட்டாக கருதாமல் வீட்டிலேயே ஓய்வெடுப்பது. சில தினங்களில் அவர்களுக்கு வீட்டிலேயே மரணம் நிகழ்வது.
எதிர் பார்த்ததைப் போல் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கடந்த 25ஆம் தேதி கூறியிருந்தார்.
கடந்த ஏப்ரல் முதல் தேதி தொடங்கி நோய்த் தொற்று அபரிமிதமாக உயர்வு கண்டு வருவதாக கூறிய அவர், இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உயர்வு காண்பதற்கு சாத்தியம் உள்ளதாக தெரிவித்தார்.








