ஷா ஆலம், மே 27- மலேசியர்கள் சமூக ஊடகங்கள் வழி நடத்திய ‘கோயாக் இஸ்ரேல்‘ எனும் பிரசார இயக்கம் அந்நாட்டுக்கு மனோ ரீதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இஸ்ரேல் மலேசியாவை தனது தாக்குதலுக்கான இலக்காக கொள்வதற்கு ‘கோயாக்‘ என்ற வாசகம் அடங்கிய பிரசார இயக்கம் முக்கிய காரணமாக விளங்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் இஸ்ரேல் வழக்கத்திற்கு மாறாக எதிர்வினையாற்றியிருந்தது. குறிப்பாக, மலேசியா உள்ளிட்ட சில நாடுகளை தாங்கள் இலக்காக கொண்டுள்ளதாகவும் அது பிரகடனப்படுத்தியிருந்தது என்றார் அவர்.
இந்த அச்சுறுத்தல் எந்த வகையிலும் நமது செயல்களை நிறுத்தவில்லை. இந்த வியூகத்தை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருவோம் என்று அவர் மேலும் சொன்னார்.
நேற்று சமூக ஊடகங்கள் வழி நேரடியாக ஒளிபரப்பான பாலஸ்தீனம் மீதான ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மலேசியத் டத்தோ தூதர் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் முக்கிய பங்கினை ஆற்றுவார் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








