ஷா ஆலம், மே 11- நோன்புப் பெருநாளின் போது உற்றார் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் வழக்கத்தை தவிர்க்கும்படி பொதுமக்களை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று அபாயக் கட்டத்தில் உள்ளதை கருத்தில் கொண்டு சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கை குறித்து நான் பெரிதும் கவலைப்படுகிறேன்.
ஆகவே, ஆகவே இந்த நோய்த் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரமடைவதை தடுக்கும் வகையில் வழக்கமாக நாம் கடைபிடிக்கும் பெருநாளின் போது சொந்த ஊர்களுக்குச் செல்வது மற்றும் விருந்தினர்களை சென்று காண்பது போன்ற நடைமுறைகளை தவிர்க்கும்படி அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
இந்த நோய்த் தொற்று விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொண்ட அவர், தங்கள் வட்டாரத்தின் நோய்த் பரவல் நிலவரம் குறித்த சமீபத்திய நிலவரங்களை தெரிந்து வைத்திருக்கும்படியும் வலியுறுத்தினார்.
வெளியில் செல்லும் போது குறைந்தது ஒரு மீட்டர் கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற எஸ்.ஒ.பி. விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
இதனிடையே, நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லீம்களுக்கும் சுல்தான் ஷராபுடின், துங்கு பெர்மைசுரி நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷா ஆகியோர் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.








