கோலாலம்பூர், மார்ச் 13- இம்மாதம் 16ஆம் தேதி முதல் மே மாதம் மையப்பகுதி வரை நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றும் இடியுடன் கூடிய கனத்த மழையும் பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
குறிப்பாக, மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் சிறிது நேரத்திற்கு இத்தகைய நிலை நீடிக்கும் என்று அத்துறை கூறியது. பருவ மழை மாற்றத்தின் இறுதி கட்டத்தின் விளைவாக இந்த வானிலை மாற்றம் ஏற்படுதாகவும் அது தெரிவித்தது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதை இந்த வானிலை மாற்றம் உணர்த்துகிறது. இதன் காரணமாக மேற்கு கரை மாநிலங்களிலும் தீபகற்ப மலேசியாவின் உட்புற பகுதிகளிலும் சபா மற்றும் சரவா மாநிலங்களின் மேற்கு பகுதியிலும் கடுமையான புயலும் இடியுடன் கூடிய கனத்த மழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மலேசிய வானிலை ஆய்வு துறையின் தலைமை இயக்குநர் ஜய்லான் சைமன் கூறினார்.
இந்த கடுமையான வானிலை காரணமாக ஆங்காங்கே திடீர் வெள்ளம் ஏற்படும் என்பதோடு வலுவற்ற கட்டுமானங்களுக்கு சேதமும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஆகவே, பொதுமக்கள் இக்காலக்கட்டத்தில் மிகுந்த கவனப்போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதோடு வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் வானிலை தொடர்பான அறிவிப்புகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








