ECONOMY

மலேசிய வரலாற்றில் புதிய அத்தியாயம்- கோவிட்-19 தடுப்பூசி நாடு வந்து சேர்ந்தது

21 பிப்ரவரி 2021, 7:38 AM
மலேசிய வரலாற்றில் புதிய அத்தியாயம்- கோவிட்-19 தடுப்பூசி நாடு வந்து சேர்ந்தது

சிப்பாங், பிப் 21- மலேசிய மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கோவிட்-19 தடுப்பூசி இன்று காலை மலேசியா வந்து சேர்ந்தது. பைசர்-பயேன்டெக் தடுப்பூசிகளை ஏற்றிய  மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானம் தாய் மண்ணை தொட்ட அந்த கணம் மலேசிய வரலாற்றில் புதிய அத்தியாயம் பிறந்தது. உயிர்களைக் காக்கும் அரசாங்கத்தின் போராட்டத்திற்கு புதிய உத்வேகமும் எழுந்தது.

அந்த தடுப்பூசிகள் மலேசியர்களுக்கானவை என்பதை குறிக்கும் வகையில் ஜாலோர் கெமிலாங் கொடி வரையப்பட்ட அந்த எம்.எச். 604 விமானம் 312,390 கோவிட்-19 தடுப்பூசிகளுடன் காலை மணி 10.07க்கு இங்குள்ள சிப்பாங் அனைத்துலக விமான நிலையம் வந்து சேர்ந்தது.

அந்த தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஏர்பஸ் 330-300 ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. அந்த தடுப்பூசிகளைத் தருவிக்கும் பணியை மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான மாஸ் கார்கோ எனப்படும் சரக்கு பிரிவு மேற்கொண்டது.

அந்த தடுப்பூசிகள் விமானத்திலிருந்து சரக்கு விநியோக நிறுவனமான டி.எச்.எல். எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் லோரிகளில் ஏற்றப்பட்டு அரச மலேசிய போலீஸ் படையின் பாதுகாப்புடன் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டன. பெல்ஜியம் நாட்டிலிருந்து இந்த தடுப்பூசிகளை அனுப்பும் பணியை அந்த மருந்து தயாரிப்பு நிறுவனமே மேற்கொண்டது.

பைசர்-பயோன்டெக் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தை கடந்தாண்டு இறுதியில் தொடங்கியது. இந்த தடுப்பூசியை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் 11ஆம் தேதி சுகாதார அமைச்சுக்கும் பைசர் (மலேசியா) சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.

மருந்து கட்டுப்பாட்டு அதிகார அமைப்பு மற்றும் தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவு ஆகியவற்றிடமிருந்து நிபந்தனையுடன் கூடிய அனுமதியைப் பெற்ற முதல் தடுப்பூசியாக சைபர்-பயோன்டெக் விளங்குகிறது. இதற்கான அனுமதி கடந்த மாதம 8ஆம் தேதி வழங்கப்பட்டது.

முதல் கட்டமாக தருவிக்கப்பட்ட இந்த தடுப்பூசியைக் கொண்டு தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை அரசாங்கம் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.