NATIONAL

திடீர்த் தேர்தல் வேண்டாம்: ‘உரியவர்களிடம் அதிகாரத்தை ஒப்படையுங்கள்‘- பக்கத்தான் வலியுறுத்து

6 பிப்ரவரி 2021, 7:33 AM
திடீர்த் தேர்தல் வேண்டாம்: ‘உரியவர்களிடம் அதிகாரத்தை ஒப்படையுங்கள்‘- பக்கத்தான் வலியுறுத்து

ஷா ஆலம், பிப் 6- திடீர் தேர்தல் தற்போதைக்கு நடத்தப்படுவதை பக்கத்தான் ஹராப்பான் எனப்படும் நம்பிக்கை கூட்டணி நிராகரித்துள்ளது. மாறாக, அதிகாரத்தை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கும்படி பெரிக்காத்தான் கூட்டணியை அது வலியுறுத்தியுள்ளது.

ஆட்சி நடத்துவதற்கு மக்கள் கடந்த 14வது பொதுத்தேர்தலின் போது வழங்கிய அதிகாரம் வரும் 2023ஆம் ஆண்டு வரை செல்லத்தக்கதாக உள்ளது என்று பக்கத்தான் செயலாளர் மன்றம் கூறியது.

‘பொதுத் தேர்தல் குறித்து சதா அறிக்கை வெளியிட்டு வரும் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் செயல் குறித்து பக்கத்தான் தலைவர் மன்றமும் கேள்வியெழுப்புகிறது. தற்போதைக்கு தேர்தல் நடத்துவது குறித்து மக்கள் சிறிதும் சிந்திக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் நிலைத்தன்மையே இப்போதைக்கு அவசியமாகும்.

‘ஆகவே, பொதுத் தேர்தல் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதிகாரத்திற்கு யார் உரியவர்களோ அவர்களிடம் அந்த அதிகாரம் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும்‘ என்று  பக்கத்தான் செயலாளர் மன்றம் கூட்டறிக்கை ஒன்றின் வழி வலியுறுத்தியது.

அந்த கூட்டறிக்கையில் கெஅடிலான் கட்சியின்  டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில், அமானா கட்சியின்  டத்தோ டாக்டர் ஹத்தா ரம்லி, ஜசெகவின் லோக் சியு ஃபூக் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.

கோவிட்-19 பெருந்தொற்று தணிந்தவுடன் நாட்டில் 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் மொகிடின் யாசின் கடந்த 4ந் தேதி மக்களுக்கு வழங்கிய சிறப்பு உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.

 

 

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.