ஷா ஆலம், ஜனவரி 23:
கடந்த 2004-இல் நடைபெற்ற 11-வது பொதுத் தேர்தலில் அம்னோ தேசிய முன்னணி பெற்ற மாபெரும் வெற்றிக்கு அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா அமாட் படாவியின் செல்வாக்கு காரணமல்ல என்று டாரூல் எசான் மையத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் டத்தோ முகமட் ரிஸூவான் ஓத்மான் தெரிவித்தார். இந்த வெற்றியின் ரகசியம் அப்போது செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ஆகும். தொகுதி மறுசீரமைப்பு எப்போதும் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்று விவரித்தார்.
" பலர் தேசிய முன்னணியின் வெற்றியை அப்துல்லா படாவியின் செல்வாக்கு என்று கூறுவார்கள். ஆனாலும் இது 10-வது பொதுத் தேர்தலுக்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகும்," என்று மக்களாட்சி கலந்துரையாடல்: தொகுதி மறுசீரமைப்பு பிஎன் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் முயற்சி: வாக்காளர்களின் உரிமைகள் எங்கே? என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.








