ஷா ஆலம், ஜனவரி 23:
எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலை புறக்கணிக்காமல், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு வாக்களித்து அம்னோ தேசிய முன்னணியை மாற்ற வேண்டும். இதன் மூலம் நாட்டு மக்கள் பல நன்மைகள் அடைவார்கள் என்று பாக்காத்தான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், வாக்களிக்க வராமல் அல்லது செல்லா ஓட்டுப் போட்டால் மீண்டும் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் பிரதமராக வருவார். கொள்ளைக்கார கும்பல் தொடர்ந்து புத்ரா ஜெயாவில் கும்மாளம் அடித்து கொண்டிருக்கும் என்று தெளிவுபடுத்தி உள்ளது.
" 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்," என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் ஆலோசகர் துன் டாக்டர் மகாதீர் முகமட், டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், டான்ஸ்ரீ முஹிடின் யாசீன், லிம் குவான் எங் மற்றும் மாட் சாபு ஆகியோர் கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அம்னோ தேசிய முன்னணியின் பரப்புரையாளர்கள் பொது மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வத்தை குறைக்கும் வகையில் செய்தால் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறது. இது மட்டுமில்லாமல் 'அரசாங்கத்திற்கு எதிரானவர்கள்' சிலரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
" பாக்காத்தான் மக்களாட்சி நடைமுறையை மதித்தாலும், இவர்களின் நடவடிக்கை நடுநிலையோடு நடக்கும் தேர்தலில் மட்டுமே இது சாத்தியம் ஆகும். வாக்களிக்க வராமல் அல்லது செல்லா ஓட்டுப் போட்டால், பாதிப்பு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கே. இதில் பயன் பெறப் போவது அம்னோ தேசிய முன்னணி மட்டுமே என்று அறிக்கையில் தெரிவித்தார் .








