ஷா ஆலாம், நவ 19 : பிங்காஸ் (BINGKAS) எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் பயன்பாடு தற்போது 52 உள்ளூர் மளிகைக் கடைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்த உதவித் தொகையைப் பெற்றவர்கள் தங்களது வீடுகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியுமென சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
மேலும், இந்த விரிவாக்கம், உதவியைப் பெற்றவர்களுக்கு பலனளிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் வியாபாரிகளின் வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் விற்பனையையும் அதிகரிக்க உதவும்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

சமூக நல உதவிகள் மக்களுக்கு நேரடிப் பயனளிப்பதோடு, குறிப்பாகச் சிறு மளிகை வியாபாரிகள் மத்தியில் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளையும் ஆதரிப்பதை உறுதிசெய்யும் முயற்சியாக இது அமைந்துள்ளது என்றாரவர்.
இதுவரை 52 உள்ளூர் மளிகைக் கடைகள் BINGKAS திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனமான Selcare, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தகுதிகளுக்கு உட்பட்டு, குறிப்பாகச் சிறு வியாபாரிகள் மற்றும் சமூக மளிகைக் கடைகளை BINGKAS மற்றும் 'கீத்தா சிலாங்கூர் ' பற்றுச்சீட்டு திட்டங்களில் இணைத்துக் கொள்ளத் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உதவிகள் உண்மையிலேயே தேவைப்படும் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய, மாநில அரசாங்கம் தகுதி நிபந்தனைகள் மற்றும் செயல்படுத்தும் முறைகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகிறது.
இதற்காக மலாயாப் பல்கலைக்கழகத்தின் சமூக நல ஆராய்ச்சி மையம் (SWRC) மற்றும் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் (UiTM) இணைந்து மாநில அரசாங்கம் ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வின் முடிவுகள் BINGKAS 3.0 திட்டத்தின் மேம்பாடுகளில் செயல்படுத்தப்பட்டு, பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான பராமரிப்பாளர் (Penjaga) பிரிவு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் 2027 சிலாங்கூர் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி, வாழ்க்கைச் செலவின உயர்வை எதிர்கொள்ளும் சுமார் 10,000 பாதிக்கப்படக்கூடிய தனிநபர்களுக்கு மாதம் 150 ரிங்கிட் உதவி வழங்கும் வகையில் BINGKAS திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக அறிவித்திருந்தார்.
100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 30,000 பேர் பயனடைவர்.
மேலும், மின்-பணப்பை (e-wallet) முறையைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், மைகாட் (MyKad) அடையாள அட்டையை பரிவர்த்தனை ஊடகமாகப் பயன்படுத்தும் முறை படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.




