ஷா ஆலாம், நவ 18 : கைபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை, சிறார்களைப் பாலியல் வன்கொடுமை (pedofilia) அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் முக்கியக் கேடயமாக அமையும்.
பெற்றோரின் கண்காணிப்பின்றி மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது, பிள்ளைகளைப் பொறுப்பற்ற நபர்களின் அச்சுறுத்தல்களுக்கும் ஆபத்துகளுக்கும் உள்ளாக்கும் எனப் பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகின்றனர்.
திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிள்ளைகள் புரிந்துகொள்ள, பெற்றோர்கள் ஆரம்பத்திலேயே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என மருத்துவ அதிகாரி டாக்டர் கதீஜா அப்துல் அஜீஸ் கூறினார்.

“தற்காலத்தில் மின்னணு சாதனங்கள் ஒரு சவாலாகவே உள்ளன. எனவே, பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் முன் பெற்றோர்களுக்குப் போதிய அறிவு இருக்க வேண்டும். நாம் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகள் கேட்கும்போது 'இல்லை' என்று சொல்லத் தயங்கக் கூடாது.
“நாம் எடுக்கும் இந்த நடவடிக்கையை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், இது அவர்களின் சொந்த நலனுக்காகவே செய்யப்படுகிறது.
பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் பெற்றோரிடமிருந்தே தொடங்குகின்றன,” என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் தெரிவித்தார்.
அவரது கருத்தை ஆமோதித்த தனியார் நிறுவன ஊழியர் முஹமட் அபிக் முஹமட் ஷா (33), குடும்ப அமைப்பின் வலிமையும் நெருக்கமான உறவுமே இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்களை ஒழிக்க உதவும் என்றார்.

மின்னணு சாதனங்களுக்கு அடிமையாகும் பிரச்சினைக்குப் பெற்றோரின் அக்கறையும் நெருக்கமான உறவுமே தீர்வாகும் என்று அவர் விளக்கினார்.
“மின்னணு சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது வீட்டிலிருந்தே தொடங்குகிறது. இணையவழி பாலியல் குற்றங்களில் பிள்ளைகள் சிக்குவதைத் தவிர்க்கப் பெற்றோர்களே முக்கியப் பங்காற்றுகின்றனர். இப்போதெல்லாம் இதுபோன்ற பல சம்பங்கள் பதிவாகின்றன.
“இத்தகைய குற்றங்களில் சமூக ஊடகப் பிரபலங்களும் (influencer) ஈடுபட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால், சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
இதனிடையே, குழந்தைகளுடன் பெற்றோர்கள் இணைந்து ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், குடும்பத்திற்கு உகந்த சமூக நடவடிக்கைகளை அரசாங்கம் அதிகளவில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனப் பெற்றோர்கள் எதிர்பார்ப்பதாகத் தனியார் நிறுவன ஊழியர் அமேலியா பர்ஹானா ஜைனுதீன் (30) தெரிவித்தார்.
“பிள்ளைகள் கைபேசி , கணினி அல்லது தொலைக்காட்சியை விட்டு விலகி இருப்பதற்கு இது ஒரு ஈர்ப்பாக அமையும். வீட்டிற்கு வெளியிலான பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
இது ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்கும். நீண்ட நேரம் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதை நாம் அறிவோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, இணையப் பாதுகாப்புப் பொறுப்பைத் சமூக ஊடகத் தளங்களை வழங்குபவர்களிடம் மட்டும் விட்டுவிடக் கூடாது என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் பெற்றோர்களுக்கு நினைவூட்டியிருந்தார்.

இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மின்னனு சாதனங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த செப்டம்பர் மாதம் அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் (SKMM) இணைந்து நடத்திய 'ஓப்ஸ் பெடோ 3.0' (Ops Pedo Bersepadu 3.0) சோதனையில், நாடு முழுவதும் 8 சிறுவர்கள் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் 90 மின்னணு சாதனங்கள் மற்றும் ஐந்து பாலியல் பொம்மைகள் உட்பட 95 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆரம்பகட்ட சோதனையில் 653,193 மின்னணு கோப்புகள் கண்டெடுக்கப்பட்டன; அவற்றில் 540,000-க்கும் மேற்பட்டவை சிறுவர் பாலியல் வன்கொடுமை தொடர்பான கோப்புகள் (CSAM) மற்றும் ஆபாசக் காட்சிகள் ஆகும்.





