ஷா ஆலாம், நவ.14: சிலாங்கூர் அரசின் பிங்காஸ் 3.0 உதவித் திட்டத்தில், பயனாளர்களின் வசதிக்காக தற்போதைய E-Wallet முறையுடன் MyKad வழியிலாக உதவித்தொகை பெறும் முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இணையத் தடைகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் பயனாளர்கள் உதவித்தொகையைப் பயன்படுத்த முடியாமல் போவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்தப் புதிய முறை அமல்படுத்தப்படவுள்ளது.
இதனை மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறைக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
மத்திய அரசின் SARA உதவித் திட்டத்தைப் போலவே, இத்திட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் MyKad மூலம் பொருட்களைக் வாங்க முடியும்.

மேலும், இரு முறைகளும் ஒருங்கிணைக்கப்படுவதால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் உடனடியாகப் பதிவு செய்யப்பட்டு, உதவித்தொகையின் மீதத் தொகை மற்றும் செலவினங்களைக் கண்காணிக்கவும் முடியும்.
2027-ஆம் ஆண்டுக்கான பிங்காஸ் திட்டத்தைச் செயல்படுத்த சிலாங்கூர் மாநில அரசு மொத்தம் RM100 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் உதவித்தொகை வழங்கப்படும்.
பிரிவு A-இன் கீழ், 18 வயதுக்குட்பட்ட குறைந்தபட்சம் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட தகுதியான குடும்பங்களுக்கு மாதந்தோறும் RM300 வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு மொத்தம் RM3,600 உதவியைப் பெற முடியும்.
பிரிவு B-இன் கீழ், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் படுக்கையிலேயே பராமரிக்கப்பட வேண்டிய நோயாளிகளுக்குப் பொறுப்பேற்றுள்ள பராமரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் RM150 உதவித்தொகை வழங்கப்படும்.
பிரிவு A-க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10 முதல் டிசம்பர் 9 வரை திறந்திருக்கும். அதேவேளையில், பிரிவு B-க்கான பதிவுகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பிரிவு A-க்கான இரண்டு பிள்ளைகள் என்ற தகுதி நிபந்தனையைப் பூர்த்தி செய்யாத குடும்பங்களுக்கு Baucar Kita Selangor Gig திட்டத்தின் கீழ் மாதந்தோறும் RM100 வீதம் 12 மாதங்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டு உதவியைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.



