வாஷிங்டன், நவ 11 : என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிற்கும், பெய்ஜிங்கின் உளவாளி என சந்தேகிக்கப்படும் சீன பெண் தொழிலதிபர் ஒருவருக்கும் இடையேயான தொடர்பு குறித்து எப்.பி.ஐ (FBI) மத்திய புலனாய்வு பிரிவு விசாரித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிலிக்கான் வேலியில் தனது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான ஜென்சன் ஹுவாங் மீதான இந்த குற்றச்சாட்டு தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து தாம் ஹுவாங்கிடம் பேசியதாகவும், அந்தப் பெண் ஓர் உளவாளி என்பது தமக்குத் தெரியாது என்று அவர் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
ஹுவாங் , ஒரு வெளிநாட்டு உளவுத்துறையின் இலக்காக இருந்தாரா என்பது குறித்து என்விடியா நிறுவன வாரியம் சுய விசாரணையைத் தொடங்கியதை அடுத்து, திங்கள்கிழமை அந்நிறுவனத்தின் பங்குகள் 4 விழுக்காட்டிற்கும் மேலாக சரிவடைந்தன.
AI-செயற்கை நுண்ணறிவு புரட்சியின் முக்கிய அடையாளமாகத் திகழும் 63 வயது ஹுவாங்கின் எதிர்காலம் குறித்த கேள்விகளை இந்த விசாரணை எழுப்பியுள்ளது.
ஜென்சன் ஹுவாங் என்விடியா ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், தான் தனது மனைவிக்கு விசுவாசமாக நடக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.
ஆனால், அந்த சீனப் பெண்ணுடன் இருந்த உறவு குறித்த கூடுதல் விவரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், இந்த குற்றச்சாட்டை சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சீன உளவு என்பது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், இது சீனாவை அவமதிக்கும் ஒரு முயற்சி என்றும் அவர் சாடினார்.





