ஹூலு சிலாங்கூர், நவ 10 : கோலா குபு பாரு,சுங்கை பெர்தாக் ஆற்று நீர் திடீரென பெருக்கடுத்ததில், அந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேரைக் காணவில்லை.
செஙெட் பாலம் (Jambatan Senget) மற்றும் சுங்கை லுயிட் முகாம் தளத்திற்கு அருகில் காலை 9:20 மணிக்கு மூவரின் உடல்களும், அதைத் தொடர்ந்து காலை 10:20 மணிக்கு சம்பவ இடத்திலிருந்து 1.2 கிலோ மீட்டர் தொலைவில் மற்றொருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டதாக, சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
முன்னதாக, வி.விஜயன் என்ற 36 வயது மலேசிய ஆடவரின் உடல் அதிகாலை 1:30 மணியளவில் பெர்தாக் பாலம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
தற்போது, செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்ட மீட்புப் பணி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த அந்த அசம்பாவிதத்தில் ஒரு ஏமன் நாட்டவர், ஓர் இலங்கையர், ஒரு நேபாளத்தவர் மற்றும் நான்கு இந்திய நாட்டவகள், வேகமான ஆற்று நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அப்பகுதியில், மலையேறும் மற்றும் பொழுது போக்கு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மேலும் சில குழுக்களைச் சேர்ந்த 26 பேர், பெர்தாக் ஆற்றுக்கு அருகில் சிக்கிக் கொண்ட வேளையில், அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.




