ஜோகூர் பாரு, நவ 10 : இன்று அதிகாலை, ஜோகூர் பாரு, பெர்மாஸ் ஜெயா கோல்ஃப் கிளப் (Permas Jaya Golf Club) அருகில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில், அதில் பயணித்த இருவர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் இருவர் காயமடைந்தனர் .
இந்த விபத்து குறித்து அதிகாலை 4.35 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு அதிகாரி ரசாலி ஹுசைன் தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, மெர்சிடிஸ் ரக கார் ஒன்று சாலையோரம் கவிழ்ந்து 90 விழுக்காடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது கண்டறியப்பட்டது .
அந்த காரில் மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்தனர். தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே அவர்களில் மூவர் காரில் இருந்து வெளியேறியுள்ளனர் .
காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டதால், முதலுதவி அளிக்கப்பட்டு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .
காயமடைந்த மற்றொரு நபர் பொதுமக்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.மேலும் ஒருவர் காயமின்றி உயிர் தப்பினார்.
காரில் சிக்கி உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட இருவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.



