ஷா ஆலாம், நவ 9 : பிள்ளைகளைக் கொண்டுள்ள தகுதியுடைய குடும்பங்களுக்கான, சிலாங்கூர் மாநில அரசின் ‘பிங்காஸ் 3.0’ (BINGKAS 3.0) எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு வாழ்க்கை உதவித் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் திறக்கப்படும்.
இத்திட்டத்திற்கு தகுதி பெறுபவர், ஒவ்வொரு மாதமும் 300 ரிங்கிட் வீதம் 12 மாதங்களுக்கு, அதாவது ஒரு வருட காலத்திற்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என மகளிர் மேம்பாடு, சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக் உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
நாளை காலை 10:00 மணி முதல் பொதுமக்கள் தங்களின் விண்ணப்பங்களை ‘SELangkah’ செயலி வழியாகச் சமர்ப்பிக்கலாம்.
இந்த நிதியுதவியைக் கொண்டு, குடும்பங்கள் தங்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், குடும்பத் தேவைகள் மற்றும் பிள்ளைகளின் பள்ளி உபகரணங்களை வாங்கிக் கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் தங்களின் ‘மைகாட்’ அடையாள அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பணப் பரிவர்த்தனைகள் பயனீட்டாளருக்கு எளிதாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் கண்டிப்பாக மலேசியராகவும், சிலாங்கூர் மாநிலத்தின் பதிவுசெய்யப்பட்ட வாக்காளராகவும் இருக்க வேண்டும்.
மேலும், குடும்பத்தின் ஒட்டுமொத்த மாதாந்திர வருமானம் 5,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். மேலும், 18 வயதிற்குட்பட்ட குறைந்தது இரு பிள்ளைகளாவது அவர்கள் பராமரித்து வர வேண்டும்.
அதோடு, விண்ணப்பதாரர் இதற்கு முன் ‘காசே இபு ஸ்மார்ட் சிலாங்கூர்’ (KISS) உதவியைப் பெற்றவராக இருக்கக் கூடாது என்பதும் முக்கிய நிபந்தனையாகும்.
இந்த உதவித் திட்டத்தின் பயன்பாட்டுக் காலம் முன்பு 24 மாதங்களாக இருந்த நிலையில், தற்போது 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தகுதியானவர்களுக்கு மட்டுமே இந்த உதவிச் சலுகை மிகச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவும், வருடாந்திர மறுபரிசீலனை மற்றும் புதுப்பித்தல் செயல்முறைகளை முறையாக மேற்கொள்வதற்காகவும் இந்த கால அளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் இத்திட்டத்தின் வருமான வரம்பு RM3,000 ரிங்கிட்டிலிருந்து 5,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதன் மூலம் கூடுதலான சிலாங்கூர் மக்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர் https://bingkasselangor.com என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தைப் பார்வையிடலாம்.




