கோலாலம்பூர், நவ 9 : கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சரவாக்-புரூணை எல்லையான சுங்கை துஜோ சோதனைச் சாவடியில், சுமார் 100 கிலோகிராம் 'ஷாபு' (ஐஸ்) போதைப்பொருளுடன் புரூணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மலேசியருக்கு ஏற்கனவே இரு குற்றப் பின்னணிகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
மிரி நகரைச் சேர்ந்த 46 வயதான அந்த நபர், கைது செய்யப்பட்ட போது சரவாக்கில் இருந்து புரூணை வழியாக சபாவிற்குச் சென்று கொண்டிருந்தார் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குனர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார்.
சுமார் 50 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக புரூணை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, மலேசிய போலீஸ் துறைக்கு தகவல் வழங்கியது.
கைதான நபர் மலேசியாவின் சபாவிற்குள் நுழைவதற்கு புரூணையை ஒரு போக்குவரத்துப் பாதையாக (Transit) பயன்படுத்த முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விசாரணையில் அந்நபர் மிரியிலிருந்து புரூணையின் குவாலா பெலாய்ட், செரியா, துத்தோங் மற்றும் பண்டார் செரி பெகாவான் வழியாகப் பயணித்து, சுல்தான் ஹாஜி ஒமார் அலி சைஃபுத்தீன் பாலத்தின் மூலம் டெம்புரோங் சென்றடைய திட்டமிட்டிருந்தார்.
அங்கிருந்து லாபு-மெங்காலப் பாதை வழியாக மீண்டும் சரவாக்கிற்குள் நுழைந்து, இறுதியாக மெராபோக்-சிந்துமின் வழியாக சபாவிற்குச் செல்லவிருந்தார்.
இந்த கடத்தல் கும்பலின் பின்னணி மற்றும் போதைப்பொருள் விநியோகிக்கப்படும் மூல இடத்தைக் கண்டறிய மலேசிய போலீஸ் துறை, புரூணை அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
சுங்கை துஜோ சோதனைச் சாவடி வரலாற்றிலேயே பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் இதுவாகும்.
அந்த போதைப் பொருள் 100 தேயிலை பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.



