இறைவழிபாடும் குடும்பச் சங்கமமும்: இல்லங்களில் ஒளியேற்றிய கோலாகல தீபாவளி

8 நவம்பர் 2026, 10:16 AM
இறைவழிபாடும் குடும்பச் சங்கமமும்: இல்லங்களில் ஒளியேற்றிய கோலாகல தீபாவளி
இறைவழிபாடும் குடும்பச் சங்கமமும்: இல்லங்களில் ஒளியேற்றிய கோலாகல தீபாவளி
இறைவழிபாடும் குடும்பச் சங்கமமும்: இல்லங்களில் ஒளியேற்றிய கோலாகல தீபாவளி
இறைவழிபாடும் குடும்பச் சங்கமமும்: இல்லங்களில் ஒளியேற்றிய கோலாகல தீபாவளி
இறைவழிபாடும் குடும்பச் சங்கமமும்: இல்லங்களில் ஒளியேற்றிய கோலாகல தீபாவளி

கோலாலம்பூர், நவ 8 : நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடனும் பண்டிகைக்கால மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்துக்கள் காலையிலேயே ஆலயங்களுக்குச் சென்று சிறப்புப் பிரார்த்தனைகளை மேற்கொண்டதோடு, குடும்பச் சங்கமங்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடனான சந்திப்புகளுடன் ஒளியின் திருநாளை வரவேற்றுள்ளனர்.

கோம்பாக், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலய வளாகம் இன்று அதிகாலை முதலே வண்ணமயமான பாரம்பரிய உடைகளை அணிந்து பிரார்த்தனை செய்ய வந்த குடும்பங்களால் களைகட்டியது.

கோம்பாக், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம்

தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வந்திருந்த 36 வயது விஷ்ணு என்பவர், சிறுவயது முதலே இந்த ஆலயத்திற்கு வருவது தங்களது குடும்பப் பாரம்பரியம் என்றும், அதை இப்போது தனது சொந்தக் குடும்பத்துடன் தொடர்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

அதோடு,வெளிநாட்டு சுற்றுப் பயணிகளும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்களும் இக்கொண்டாட்டங்களில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

சிலாங்கூரில், செத்தியா ஆலாம் முனியாண்டி எல்லை ஆலயத்தில், காலை வழிபாட்டில் கலந்து கொண்ட 23 வயது ஏ. நர்மதா, இவ்வாண்டு தீபாவளி அனைத்து மலேசியர்களுக்கும் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் தர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

பேராக்கில், ஈப்போ குனோங் செரோவில் உள்ள கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் அதிகாலை 6.30 மணி முதலே சுமார் 10,000 இந்துக்கள் பிரார்த்தனைக்காகக் கூடினர்.

ஈப்போ குனோங் செரோவில் உள்ள கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம்

பக்தர்கள் பலர் அதிகாலையிலேயே வீடுகளில் வழிபாட்டினை முடித்துவிட்டு, மலர்கள், பால் மற்றும் பழங்களுடன் வண்ணமயமான பாரம்பரிய ஆடைகளில் ஆலயத்திற்கு வந்ததாக ஆலயத் தலைவர் ஆர். சீதாராமன் (56) தெரிவித்தார்.

பினாங்கில், ஜாலான் பாருவில் உள்ள முனீஸ்வரர் ஆலயம் மற்றும் செபராங் ஜெயாவில் உள்ள அருள்மிகு கருமாரியம்மன் ஆலயம் ஆகிய இடங்களிலும் அதிகாலை முதலே அனைத்து வயது மக்களும் திரண்டனர்.

செபராங் ஜெயாவைச் சேர்ந்த இல்லத்தரசி ஆர். தேவி (68), தீபாவளி என்பது குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிற இன அண்டை வீட்டாருடன் கலந்துரையாடுவதற்கும், இளைய தலைமுறைக்கு ஒற்றுமையின் உணர்வைக் கடத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினார்.

நெகிரி செம்பிலானில், சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நெரிசலைத் தவிர்த்து பக்தர்கள் வசதியாகப் பிரார்த்தனை செய்வதற்காகக் காலையிலும் மாலையிலும் என இரண்டு கட்டங்களாகச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம்

கெடாவில், அனாக் புகிட் பகுதியில் கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்து சமூகத்தினருக்கு இவ்வாண்டு தீபாவளி கூடுதல் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்தது.

இப்பகுதியைச் சேர்ந்த ஆர். நந்திரன் (43), கடந்த ஆண்டைப் போல இம்முறை வெள்ள அபாயம் இல்லாததால் குடும்பத்துடன் நிம்மதியாகக் கொண்டாட முடிந்தது என்றார்.

இவர்களது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி உபசரிப்பில் மலாய் , சீன நண்பர்களுக்காக ஆட்டிறைச்சி வறுவல், தோசை, பிரியாணி போன்ற ஹலால் உணவுகள் பரிமாறப்பட்டன.

சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான ஆலயம்

பினாங்கில் பணிபுரியும் எஸ். குலனசாரி (36) என்பவர், பணிச்சுமையால் கடந்த ஈராண்டுகளாக பெற்றோர் வீட்டிற்கு திரும்பாத நிலையில், இவ்வாண்டு கோலா கெடாவில் அவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது கூடுதல் சிறப்பு என்று கூறினார்.

கிளாந்தானில், தானா மேரா, கம்போங் லாடாங் கெரிலா பகுதியில் உள்ள இந்துக்கள் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில், வழிபாட்டுடன் எளிய முறையில் ஆனால், அர்த்தமுள்ளதாகத் தீபாவளியை வரவேற்றனர்.

கூச்சிங் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் காலை வழிபாட்டில் கலந்து கொண்ட இந்துக்கள்

ஜி.மாறன் (45) என்பவர் , சொந்த ஊருக்குத் திரும்பிய உறவினர்களைச் சந்தித்து பாரம்பரியப் பலகாரங்களை மகிழ்ந்துண்ண இந்த நாள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றார்.

ஜொகூர் பாருவில் உள்ள 115 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தான ஆலயத்திற்கு இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட சுமார் 2,500 பக்தர்கள் வருகை தந்தனர்.

ஜோகூர் , அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தான ஆலயம்

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தின் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தைக் கண்டு வியக்க மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்ததாக ஆலயப் பொருளாளர் முரளி சாமி தெரிவித்தார்.

பகாங்கில், குவாந்தானைச் சேர்ந்த 65 வயது ஆர். பாலாமாலின் இல்லம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியிலும் சிரிப்பொலியிலும் நிறைந்தது.

முன்னதாக அவர்கள் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

ஈப்போ கல்லுமலை அருள்மிகு ஆலயத்தில் பக்தர்கள்

பெர்லிஸில், கங்காரில் உள்ள அருள்மிகு ஆறுமுகசுவாமி தேவஸ்தான ஆலயத்தில் காலை 7 மணி முதலே பக்தர்கள் வழிபாட்டிற்கு வந்தனர்.

ஆலய நிர்வாகத்தின் சார்பில் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு ஒளியின் திருநாள் மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளப்பட்டது என ஆலயத் தலைவர் டத்தோ ஆர்.ஹரிராம் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.