ஷா ஆலாம், நவ 7 : கிள்ளானில் நவம்பர் 4 முதல் 13 வரை நடைபெறும் FIDE 2026 உலக அமெச்சூர் சதுரங்க வெற்றியாளர் போட்டி, விளையாட்டின் வழி உறவை வலுப்படுத்தவும், அனைத்துலக உறவுகளை விரிவுபடுத்தவும் , விளையாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் ஒரு முக்கிய தளமாக அமைந்துள்ளது.
அனைத்துலக சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ஆதரவுடன், சிலாங்கூர் சதுரங்க சங்கம் மற்றும் மலேசிய சதுரங்க சம்மேளனம் இணைந்து நடத்தும் இப்போட்டியில் 55 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 உள்ளூர் மற்றும் அனைத்துலக வீரர்கள் பங்கேற்றுள்ளனர் என்று இப்போட்டியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகளாவிய நிகழ்ச்சி, வெறும் விளையாட்டுப் போட்டியாக மட்டுமில்லாமல், மலேசியாவின் தனித்துவமான கலாச்சாரம், பாரம்பரியம், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் தலங்களை அனைத்துலக சதுரங்க சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் மொத்த விளையாட்டாளர்களில் சுமார் 300 பேர் அனைத்துலக விளையாட்டாளர்கள் ஆவர்; எஞ்சியவர்கள் உள்ளூர் விளையாட்டாளர்கள் ஆவர்.
இவர்கள் அனைவரும் பொது மற்றும் மகளிர் பிரிவுகளின் கீழ் 1700-க்கு கீழ், 2000-க்கு கீழ் மற்றும் 2300-க்கு கீழ் ஆகிய மூன்று தரவரிசை நிலைகளின் அடிப்படையில் போட்டியிடுகிறார்கள்.
இந்த வெற்றியாளர் போட்டியின் ஏற்பாடு 'மலேசியா சுற்றுலா ஆண்டு 2026/2027' மற்றும் 'சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு 2026' ஆகிய பிரச்சாரங்களுக்குப் பெரும் ஆதரவாக அமைவதோடு, உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில் மலேசியாவின் சிறந்த ஆற்றலையும் உலகிற்கு வெளிப்படுத்துகிறது.
இந்த பிரம்மாண்ட போட்டிக்கு சிலாங்கூர் சுற்றுலா துறை, மலேசியா சுற்றுலா துறை, மலேசிய மாநாட்டு கண்காட்சி பிரிவு (MyCEB), சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் இளைஞர், விளையாட்டு அமைச்சு ஆகியவை முழு ஆதரவை வழங்கியுள்ளன.
கடந்த நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவிற்கு, இப்போட்டியின் அரசப் புரவலரான சிலாங்கூர் ராஜா முடா தெங்கு அமீர் ஷா தலைமை தாங்கி சிறப்பித்தார்.

இவ்விழாவின் போது, அவர் அனைத்துலக சதுரங்க போட்டியின் புகழ்பெற்ற கிராண்ட்மாஸ்டர் நைஜல் ஷார்ட் (Nigel Short) உடன் சதுரங்கம் விளையாடி மகிழ்ந்தார்.



