வடகிழக்கு பருவமழை : வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள PETRA அமைச்சு தயார்

7 நவம்பர் 2026, 8:23 AM
வடகிழக்கு பருவமழை : வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள PETRA அமைச்சு  தயார்
வடகிழக்கு பருவமழை : வெள்ள அபாயங்களை எதிர்கொள்ள PETRA அமைச்சு  தயார்

புத்ராஜெயா, நவ 11 : 2026/2027 வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை எரிசக்தி நீர் உருமாற்ற அமைச்சு (PETRA) மேற்கொண்டுள்ளது.

முன்கூட்டியே திட்டமிடல், வளங்களை முறையாக ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை ஆகியவற்றில் இம்முறை அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அவ்வமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி, 2027 மார்ச் மாதம் வரை நீடிக்கவிருக்கும் இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தின் போது, வெள்ள அபாயங்களை திறம்பட கையாள்வதற்காக, நீர்ப்பாசன வடிகால் துறை (JPS) மூலம் அனைத்து ஏற்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன என்று அவ்வமைச்சு கூறியது.

கடந்த 2025 நவம்பர் 13 முதல் 2026 மார்ச் 31 வரையிலான முந்தைய பருவமழைக் காலத்தில், நீர்ப்பாசன வடிகால் துறையின் தேசிய வெள்ள முன்னறிவிப்பு- எச்சரிக்கை மையம் (PRABN) 64 முன்கூட்டியே வெள்ள முன்னறிவிப்புகள் மற்றும் 39 வெள்ள எச்சரிக்கைகள் உட்பட மொத்தம் 103 செய்தி அறிக்கைகளை வெளியிட்டிருந்தது.

மேலும், தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்தின் (MCMC) பதிவுகளின்படி, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 1 கோடியே 48 லட்சம் அவசரகால குறுஞ்செய்தி (SMS) எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன.

அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 480 பருவமழை வெள்ளம், 274 திடீர் வெள்ளம், 25 தேக்கநிலை வெள்ளம் மற்றும் 20 கடலோர வெள்ளம் என மொத்தம் 799 வெள்ளச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

ஆறுகள் வழிந்தோடுதல், வடிகால் பிரச்சனைகள் மற்றும் கடல் சீற்றம் ஆகியவற்றுடன், குப்பைகளை முறையாக அகற்றாதது, அடைபட்ட வடிகால்கள், கட்டுப்பாடற்ற நில மேம்பாடு போன்ற உள்ளூர் பிரச்சனைகளும் இந்த வெள்ளத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

இதனிடையே, 2026/2027 பருவமழையை எதிர்கொள்ள, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் 614 வெள்ள எச்சரிக்கை சைரன்களும், 197 கண்காணிப்புக் கேமராக்களும் செயல்பாட்டில் உள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது மூன்று முறை வெள்ள பாதிப்பைச் சந்தித்த 3,045 இடங்கள் , வெள்ள அபாயப் பகுதிகளாக (Hotspots) அடையாளம் காணப்பட்டன.

இதில் அதிகபட்சமாக கிளாந்தானில் 609 இடங்களும், அதைத் தொடர்ந்து பகாங்கில் 572 இடங்களும், திரங்கானுவில் 460 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள, 1,079 நீர் கட்டுப்பாட்டு கதவுகளும், 285 பம்ப் இல்லங்களும், வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் நல்ல நிலையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, வெள்ள பாதிப்புகளைக் குறைக்க மிகவும் முக்கியமான பகுதிகளுக்கு உடனடியாக கொண்டு செல்லக்கூடிய 580 சிறிய ரக அவசரகால பம்புகளும் தயார் நிலையில் உள்ளன.

மேலும், 16 நீர்பாசன வடிகால் துறையின் கட்டுப்பாட்டு அணைகளும், 781 வெள்ளத் தடுப்புக் குளங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அதிக ஆபத்துள்ள நதிப் படுகைகளில் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இம்முறையும் ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் வெள்ள எச்சரிக்கைகளை அனுப்ப MCMC மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து PETRA செயலாற்றி வருகிறது.

அத்துடன், பருவமழைக் காலத்தில் வெள்ள நீரைத் தேக்கும் திறனை அதிகரிக்க, அணைகளில் இருந்து தண்ணீரைத் திறந்து விடுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுக்க மாநில அதிகாரிகளுடன் அமைச்சு இணைந்து செயல்படுகிறது.

வெள்ள அபாயங்களைக் குறைக்கும் ஒரு பகுதியாக, 2026 ஆம் ஆண்டில் 652 மில்லியன் ரிங்கிட் செலவில் 1,638 சிறிய திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆண்டில் 3.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன் 13-வது மலேசியத் திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையின் கீழ் 342 மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வெள்ள முன்னறிவிப்புகள் மற்றும் அவசர எச்சரிக்கைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, நீர்ப்பாசன வடிகால் துறையின் 'Public InfoBanjir' இணையதளத்தையோ அல்லது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் 'MyPublicInfoBanjir' செயலியையோ பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.