வைரலான சித்திரவதை காணொளி : முதியவர் மரணத்தை கொலை சம்பவமாக போலீஸ் விசாரணை

5 நவம்பர் 2026, 12:58 PM
வைரலான சித்திரவதை காணொளி : முதியவர் மரணத்தை கொலை சம்பவமாக போலீஸ் விசாரணை

சிரம்பான், நவ 5 : சிரம்பான், ராசா ஜெயா (Rasah Jaya) பகுதியில் முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கொலை சம்பவமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்று காலை 10 மணியளவில் வைரலான டிக்டாக் (TikTok) காணொளி தொடர்பாகப் போலீசாருக்குப் புகார் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

"நேற்று மாலை அந்த முதியவர் இறப்பதற்கு முன்பு, 60 வயது மதிக்கத்தக்க அவர் சிலரால் சித்திரவதை செய்யப்படுவதை அந்த காணொளியில் காண முடிந்தது," என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

முன்னதாக, ராசா ஜெயாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் , சக்கர நாற்காலியில் இருந்த முதியவரை இருவர் தாக்கும் காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியது.

அந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் (கொலை வழக்கு) கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அல்சாஃப்னி கூறினார்.

"இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 28 முதல் 34 வயதுக்குட்பட்ட ஒரு உள்ளூர் ஆடவரும் , இரு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவரை அடிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் சந்தேகிக்கப்படும் ரப்பர் குழாய் , சக்கர நாற்காலி, ஒரு கைபேசி மற்றும் ஆடைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அரசாங்க சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர், இந்த சித்திரவதை காணொளியைப் பார்த்த பிறகு, அது குறித்து விசாரிக்க அந்த இடத்திற்குச் சென்றதாகக் கூறினார்.

அங்கு சென்றபோது, இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்ததாகவும், இறந்தவர் வைரல் காணொளியில் தாக்கப்பட்ட அதே முதியவர் என்பதை அவர் அடையாளம் கண்டதாகவும் கூறினார்.

அந்த இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடத்தப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர், போலீசாரின் உதவியோடு இறுதிச்சடங்கு நிறுத்தப்பட்டு, முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.