ஷா ஆலம், நவ 5: சிலாங்கூர் மாநில அரசாங்கம் பெரிய அளவிலான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் நிறைவடையும் வரை காத்திருக்காமல், மாநிலம் முழுவதும் வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதிப்பைக் குறைப்பதற்காக 255 உடனடி வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகிறது.
கிட்டத்தட்ட 7 கோடி ரிங்கிட் நிதி ஒதுகீட்டைக் கொண்ட இத்திட்டங்களில் 70 விழுக்காடுப் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டதாகவும், எஞ்சிய பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
"மாறிவரும் தீவிர காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில், வெள்ளப் பிரச்சனை ஒரே இரவில் மறைந்துவிடும் என்று மாநில அரசு வாக்குறுதி அளிக்கவில்லை. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு வழக்கமான மழைப்பொழிவின் அளவை விட மிக அதிகமாகப் பெய்த மழையே காரணம் ஆகும்," என்று அவர் இன்று தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் முழுவதும் மொத்தம் 4.28 பில்லியன் ரிங்கிட் செலவில் 105 நீண்டகால வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் (RTB) செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை படிப்படியாக நிறைவடையும் என்றும் அமிருதின் கூறினார்.
வெள்ளப் பிரச்சனைகளைக் கையாள்வதில் ஊராட்சி மன்றங்கள் மற்றும் மத்திய அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையே தனித்தனியாகச் செயல்படும் பணி கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக, கடந்த டிசம்பர் 2024-இல் ஒரு சிறப்புப் பணிக்குழுவை மாநில அரசாங்கம் அமைத்ததாக அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் வெள்ள அபாயத்தைக் குறைக்க அனைத்து அமைப்ப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய இந்த ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அதே வேளையில், பத்து அணைக்கட்டு (Empangan Batu) மற்றும் கிள்ளான் கேட்ஸ் அணைக்கட்டு (Empangan Klang Gates) ஆகியவற்றின் கொள்ளளவை மதிப்பிடுதல் மற்றும் மேல்நிலைப் பகுதிகளில் புதிய நீர் தேக்கக் குளங்களின் இருப்பிடங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட ஐந்து அம்சத் திட்டங்களின் மூலம் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் இடையிலான ஒத்துழைப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னர் சிலாங்கூரில் நிலவி வந்த தூய்மையான குடிநீர் விநியோகத் தட்டுப்பாடு பிரச்சனையை வெற்றிகரமாகக் கையாண்டதை, மாநில அரசின் நீண்டகாலத் திட்டமிடலின் செயல்திறனுக்கு ஒரு சிறந்த உதாரணமாக அமிருதின் சுட்டிக்காட்டினார்.
வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் அதே வேளையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சிலாங்கூர் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பேணிக் காப்பதற்காக, காலம் மற்றும் இடத்தைப் பொருட்படுத்தாமல் வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்வது மாநில அரசின் முதன்மை முன்னுரிமையாகத் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





