கோலாலம்பூர், நவ 5 : உயர்கல்வி கூட மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் உள்ளிட்ட இளைஞர்களை இலக்கு வைக்கும் கடத்தல் கும்பல்களின் சதியால், 2024 முதல் 2026 செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில், 213 மலேசியர்கள் போதைப்பொருள் கடத்திகளாக (Drug Mules) செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்.
இளைஞர்களை சதியில் விழ வைப்பதற்காக அதிக சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள், இலவச சுற்றுலா திட்டங்கள், விமானப் பயணச்சீட்டுகள், தங்குமிட வசதிகள் மற்றும் பண ஊக்கத்தொகைகளை, இக்கடத்தல் கும்பல்கள் பயன்படுத்துவதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
அதே வேளையில், போதைப்பொருள் விற்பனையை விளம்பரப்படுத்தவும், வாடிக்கையாளர்களைப் பெறவும், வர்த்தகத்தை நடத்தவும் இக்கும்பல்கள் சமூக ஊடகங்கள், மின்-வணிக தளங்கள் மற்றும் தகவல் தொடர்பு செயலிகளைப் பயன்படுத்துகின்றன என்று இன்று மக்களவை கேள்வி-பதில் நேரத்தின் போது அவர் கூறினார்.
இதனிடையே, போலி கணக்குகளைப் பயன்படுத்துதல், தற்காலிக மற்றும் ரகசிய தகவல் தொடர்பு குழுக்களை உருவாக்குதல், ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் மின்-பணப்பைகளை (e-wallet) பயன்படுத்துதல், அத்துடன் அஞ்சல் ( கூரியர்) சேவைகளின் மூலம் ' பொருட்களைப் பெற்றப் பின்னர் பணம் செலுத்துதல்' (COD) மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பொருட்களைக் கைமாற்றுதல் ஆகிய வழிமுறைகள் இக்கும்பல்களால் பயன்படுத்தப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, உள்துறை அமைச்சு, அரச மலேசிய போலீஸ் படையின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் மூலம் 24 மணி நேர இணைய கண்காணிப்பையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC), டிஜிட்டல் தள வழங்குநர்கள் மற்றும் கூரியர் நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றன என்றாரவர்.
கடந்த 2025-ஆம் ஆண்டில் 47 கணக்குகளும், நடப்பு ஆண்டில் (2026) இதுவரை 49 கணக்குகளும் இணைய கண்காணிப்பின் மூலம் முடக்கப்பட்டுள்ளதாக ஷம்சுல் அனுவார் தெரிவித்தார்.
மேலும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்டறியவும், பணம் செலுத்துதல் மற்றும் விநியோகங்களைத் தடுத்து நிறுத்தவும் நிதி நிறுவனங்கள் மற்றும் கூரியர் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளிகளைப் பிடிக்க 'பணப் பாதையைப் பின்தொடர்தல்' (Follow the money) என்ற சிறப்பு அணுகுமுறையும் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், புதிதாக உருவெடுத்து வரும் போதைப்பொருள் வகைகளுக்கு எதிராக மிகவும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எடுப்பதற்காக, அத்தகைய பொருட்களை, 'மன நிலையை மாற்றும் பொருட்கள்' (NPS) சட்டத்தின் கீழ் கொண்டு வர ஏதுவாக, 1952-ஆம் ஆண்டின் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் முதல் அட்டவணையைத் திருத்துவது குறித்தும் அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றாரவர்.



