பொருட்களின் கையிருப்பு சீராக உள்ளது; மக்கள் பீதியடையத் தேவையில்லை

5 நவம்பர் 2026, 8:18 AM
பொருட்களின் கையிருப்பு சீராக உள்ளது; மக்கள் பீதியடையத் தேவையில்லை

ஷா ஆலம், நவ 5: உலக அரசியல் சூழல் மற்றும் பருவமழை அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு தொடர்ந்து சீராக இருப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கின்றது.

தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் மூலம் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு,விநியோகச் சங்கிலி தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் எந்தவொரு தடையையும் தவிர்க்க முடியும் என்று உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவினத் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.

அனைத்துலக விநியோகத்தைப் பாதிக்கக்கூடிய மத்திய கிழக்கு மோதல்கள் உள்ளிட்ட உலகளாவிய அரசியல் முன்னேற்றங்களை அரசாங்கம் தீவிரமாக கவனித்து வருகிறது. இருப்பினும் நாட்டிற்குள் நிலைமை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என அமைச்சர் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் 'டீலைவ்'-வின் (Tealive) -புதிய பானத்தை அறிமுகப்படுத்தி வைத்தப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், சில வெளிநாடுகள் தங்களது குடிமக்களை அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைக்குமாறு ஊக்குவித்திருப்பதைத் தொடர்ந்து, பொதுமக்கள் யாரும் பீதியடைந்து பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் அர்மிசான் அறிவுறுத்தினார்.

கடுமையான குளிர்காலம் மற்றும் சூறாவளி போன்ற தீவிர வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படுவதால், அந்த நாடுகளின் சூழ்நிலை வேறுபட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரை நாட்டிற்குள் விநியோகத் தட்டுப்பாடு தொடர்பாக எந்தவொரு பெரிய பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.

பருவமழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்துப் பேசிய அர்மிசான், அமைச்சின் தலைமைச் செயலாளர் தலைமையிலான 'விநியோகம் மற்றும் விலை நிலைப்படுத்தலுக்கான தொழில்நுட்பக் குழு' மூலம் உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவின அமைச்சு கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

விநியோகத் தடை ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு எப்போதும் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய இக்குழு இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆலோசிப்பதாக அவர் கூறினார்.

"இதை நாங்கள் ஒரு தனிப்பட்ட பிரச்சனையாகப் பார்க்கவில்லை, நாங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும், அதே நேரத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்," என்றார்.

இக்காலக்கட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய, தற்போதுள்ள அனைத்து வழிமுறைகளும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.