பெட்டாலிங் ஜெயா, நவ 2 - பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், சுற்றுப்புறச் சூழல் நிலைத்தன்மைக்கான பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, இவ்வாண்டின் செப்டம்பர் மாதம் வரை பிளாஸ்டிக் பை கட்டணங்கள் மூலம் 68 லட்சத்து 80,000 ரிங்கிட் நிதியைத் திரட்டியுள்ளது.
அந்தத் தொகையில் 40 விழுக்காடு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் கணக்கிலும் , மீதமுள்ள 60 விழுக்காடு மாநில அரசாங்கத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அம்மன்றத்தின் தலைவர் டத்தோ முகமட் யாசித் சைரி தெரிவித்தார்.
திரட்டப்பட்ட இந்த நிதியிலிருந்து 11 லட்சத்து 70,000 ரிங்கிட் தொகை மறுசுழற்சி திட்டங்கள், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உள்ளிட்ட 14 திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், கழிவுகளைப் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கவும் உதவுவதோடு, உள்ளூர் வணிகர்களுக்கும் ஆதரவாக அமைகிறது.
குப்பை கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவைக் குறைக்கவும், பெட்டாலிங் ஜெயாவை குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட, நிலையான மற்றும் நெகிழ்ச்சியான நகரமாக மாற்றும் நோக்கத்தை எட்டவும் மாநகர் மன்றம் தொடர்ந்து இம்முயற்சிகளை எடுக்குமென டத்தோ முகமட் யாசித் குறிப்பிட்டார்.
இதனிடையே, 'மறுசுழற்சி மற்றும் மீட்பு' திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 28 இல் தாமான் மேடானிலும் , ஜூலை 1-இல் எஸ்எஸ்2 (SS2) பகுதியிலும் நடத்தப்பட்ட இரு கட்டப் பிரச்சாரங்களில் மொத்தம் 750 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு 3,410 கிலோகிராம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைச் சேகரித்தனர்.
இந்த வெற்றிகரமான முயற்சியைத் தொடர்ந்து, செக்க்ஷன் 3 (Section 3) உழவர் சந்தையில் இதன் மூன்றாவது கட்டத்தை நடத்த மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளது.



