RM 4 லட்சம் மதிப்புள்ள சட்டவிரோத உடல் எடைக் குறைப்பு மருந்துகள் பறிமுதல்

2 நவம்பர் 2026, 7:32 AM
RM 4 லட்சம் மதிப்புள்ள  சட்டவிரோத உடல் எடைக் குறைப்பு  மருந்துகள் பறிமுதல்

கோலாலம்பூர், நவ 2 - மலேசிய சுகாதார அமைச்சு, கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில், இணையத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 4 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள பதிவு செய்யப்படாத பல்வேறு உடல் எடையைக் குறைக்கும் மருந்துகளையும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளது.

இதில் தற்பொழுது இணையத்தில் பிரபலமாகப் பேசப்படும் 'ஓசெம்பிக்' (Ozempic) மற்றும் இன்னும் சோதனைக் கட்டத்தில் உள்ள 'ரெடாட்ரூடைட்' (Retatrutide) ஆகிய மருந்துகளும் அடங்கும்.

மக்களவையின் இன்றைய கேள்வி பதில் நேரத்தின் போது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹ்மாட் இந்த விவரங்களை வெளியிட்டார்.

முறையான மருத்துவக் கண்காணிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி, 'GLP-1 RA' வகை மருந்துகளைப் பொதுமக்களுக்கு விநியோகிப்பதும் வாங்குவதும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ரெடாட்ரூடைட் (Retatrutide), இது இன்னும் மலேசியாவின் அதிகாரப்பூர்வ மருந்துப் பட்டியலில் சேர்க்கப்படாத ஒரு சோதனைமுறை மருந்தாகும். இதன் மீது நடத்தப்பட்ட 12 சோதனைகளில் RM341,000 மதிப்புள்ள 697 மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, ஓசெம்பிக் (Ozempic), செமாக்லுடைட் (Semaglutide) என்ற தீவிர வேதிப்பொருளைக் கொண்ட இந்த மருந்தின் சட்டவிரோத விற்பனை தொடர்பாக 7 சோதனைகள் நடத்தப்பட்டு, RM64,170 மதிப்புள்ள 62 மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வர்த்தக மின் தளங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாக இந்த மருந்துகள் விளம்பரப்படுத்தப்பட்டு, சட்டவிரோதமாக விற்கப்படுவதைத் தடுக்க சுகாதார அமைச்சின் மருந்தக அமலாக்கப் பிரிவு தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான சோதனைகளை நடத்தி வருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

"இணையத்தள வர்த்தக முறைகேடுகளை நாங்கள் தொடர்ந்து மிகத் தீவிரமாகக் கண்காணிப்போம். ஏனெனில், இறுதியில் நாங்கள் பாதுகாக்க விரும்புவது பொதுமக்களின் பாதுகாப்பையும் அவர்களின் உயிரையுமே ஆகும்," என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் சுல்கிப்லி, 2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ஓசெம்பிக், திர்சிபடைட் (Tirzepatide) மற்றும் மௌஞ்ஜாரோ (Mounjaro) போன்ற GLP-1 மருந்து சிகிச்சைகளுக்கு எனத் தனி நிதி ஒதுக்கீடு எதுவும் தற்போது இல்லை என்றார்.

இருப்பினும், இந்த மருந்துகள் அவசரமாகத் தேவைப்படும் நோயாளிகள், சுகாதார அமைச்சின் சிறப்பு மருந்து ஒப்புதல் பிரிவின் (UKK) கீழ் விண்ணப்பித்து, தற்போதுள்ள பொது நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்த வகையில், இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் 240 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்காக RM2.56 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.