ஷா ஆலாம், நவ 2 : மலேசியாவின் சிலாங்கூர் போன்ற அதிக வாழ்க்கைச் செலவினங்களைக் கொண்ட மாநிலங்களில், மாதத்திற்கு 3,000 ரிங்கிட் என்ற ஒற்றை வருமானத்தை நம்பியிருக்கும் இளம் குடும்பங்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
இந்த வருமானம் தனிநபர்களுக்குப் போதுமானதாக இருந்தாலும், ஒரு குடும்பத்தை வழிநடத்த இது போதுமானது அல்ல என, மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் (UPM) மனித சூழலியல் புலத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் முஹமட் ஃபஸ்லி சப்ரி தெரிவித்தார்.

மலேசிய புள்ளி விபரத் துறையின் 'அடிப்படை வாழ்க்கைச் செலவினக் கணக்கீட்டின்'படி, சிலாங்கூரில் ஒரு தனிநபர் வசதியாக வாழ 2,600 ரிங்கிட் தேவைப்படுகிறது.
ஆனால், ஒரு தம்பதியினரும் குழந்தையும் அடங்கிய குடும்பத்திற்கு சுமார் 5,700 ரிங்கிட் தேவைப்படுகிறது.
எனவே, ஒரு குடும்பத்திற்கு 3,000 ரிங்கிட் வருமானம் என்பது நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி, அவர்களைக் கடன் சுமைக்கு தள்ளும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
நிதி நெருக்கடியால் பாதிக்கப்படும் குடும்பங்கள் அனைத்தும் பணத்தை வீணடிப்பவர்கள் அல்ல என்று முஹமட் ஃபஸ்லி சுட்டிக்காட்டினார்.
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சிக்கனமாக வாழ்ந்த பிறகும் பணம் பற்றாக்குறையாக இருந்தால், அது தனிநபரின் ஒழுக்கக் குறைபாடு அல்ல; மாறாக அது தற்போதைய வாழ்க்கைச் செலவினங்களுக்கும் வருமானத்திற்கும் இடையே உள்ள 'அமைப்பு ரீதியான சமநிலையின்மை' (structural problem) ஆகும்.
இதற்கு வெறும் சிக்கன நடவடிக்கைகளை மட்டும் நம்பியிருக்காமல், மக்களின் வருமானத்தை உயர்த்துவதே சரியான தீர்வாகும்.
இதற்குத் தீர்வாக, தொழிலாளர்கள் தங்களின் திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த ஊதியத்தைப் பெற முடியும்.
பகுதி நேர வேலைகள் மற்றும் கிக் பொருளாதாரம் (gig economy) தற்காலிக வருமானத்திற்கு உதவினாலும், அது நீண்ட காலத்திற்கு நிலையானது அல்ல.
மேலும், சம்பள உயர்வை மட்டுமே நம்பியிருக்காமல், பணியிடங்களுக்கு அருகில் மலிவு விலை குழந்தைப் பராமரிப்பு நிலையங்களை உருவாக்குதல், இலக்கு வைக்கப்பட்ட அரசாங்க உதவிகள், பொதுப் போக்குவரத்து மற்றும் மலிவு விலை வீடமைப்புத் திட்டங்கள் போன்ற கூட்டு முயற்சிகளை அரசாங்கமும் முதலாளிகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





