போலி சோகக் கதைகள், நிஜ பண இழப்பு: AI நன்கொடை மோசடி குறித்து எச்சரிக்கை

2 நவம்பர் 2026, 5:06 AM
போலி சோகக் கதைகள், நிஜ பண இழப்பு: AI நன்கொடை மோசடி குறித்து எச்சரிக்கை

கூலாய், நவ 2 - செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களின் இரக்க உணர்வைத் தூண்டி ஏமாற்றும் அதிநவீன 'நன்கொடை மோசடிகள்' குறித்து பொது மக்கள் மிக விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மோசடி செய்பவர்கள் மேம்பட்ட AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான சோகமான சூழ்நிலைகளை உருவாக்கி, பொதுமக்களின் பரிதாபத்தைப் பெற்று ஏமாற்றுவதற்காக, போலி நன்கொடை பிரச்சாரங்களை நடத்துகிறார்கள் என தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.

மலேசியர்களின் தாராள மனதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் இத்தகைய பிரச்சாரங்களில் பண உதவி செய்வதற்கு முன், அதன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்குமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இன்று இங்குள்ள லாடாங் கூலாய் பெசார் ( தமிழ்ப்பள்ளிக்கு வேலை நிமித்தமாக வருகை தந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

AI மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவது கவலையளிப்பதாகத் தெரிவித்த தியோ, மோசடி செய்பவர்கள் நன்கொடையாளர்களை ஏமாற்றுவதற்காக உணர்ச்சிப்பூர்வமான உள்ளடக்கங்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சில தனிநபர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்திப் பணம் வசூலிப்பது குறித்தும் அமைச்சுக்கு புகார்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாண்டு அக்டோபர் 15-ஆம் தேதி வரை மோசடி தொடர்பான 174,099 பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக தளங்களுக்குக் கோரிக்கைகள் அனுப்பப்பட்டன என மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளது.

இது கடந்தாண்டு முழுவதும் அனுப்பப்பட்ட 102,113 கோரிக்கைகளை விட அதிகமாகும்.

இவ்வாண்டின் கோரிக்கைகளில், சுமார் 98 விழுக்காடு (170,633) பதிவுகள் வெற்றிகரமாக நீக்கப்பட்டன.

அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய சில சந்தேகத்திற்குரிய AI பதிவுகளில், சோகமான காட்சிகளுடன் பொதுமக்களிடம் நன்கொடை கேட்பதற்கான வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட QR குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன.

எனினும், அந்தப் படங்களில் உள்ள சில முரண்பாடுகள் மற்றும் நம்பமுடியாத விவரங்களை வைத்து அவை AI மூலம் உருவாக்கப்பட்டவை என்பதைச் சமூக ஊடகப் பயனர்கள் கண்டறிந்துள்ளனர்.

இத்தகைய மோசடிப் புகார்கள் மீது MCMC கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சமூக ஊடக தளங்களில் இருந்து அவற்றை நீக்கக் கோருவதாகவும் தியோ உறுதியளித்தார்.

தங்களின் அடையாளங்கள் அல்லது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட தனிநபர்கள், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு உரிமையாளர்களைப் போலீசார் கண்டறிய உதவும் வகையில் உடனடியாகப் புகார் அளிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே, மற்றொரு விவகாரத்தில் ,மித்ரா-மலேசிய இந்திய சமூக உருமாற்றுப் பிரிவின் 1 லட்சத்து 50,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கூலாய் மாவட்டத்திலுள்ள தமிழ் தொடக்கப் பள்ளிகளுக்கு, ஐந்து 86-அங்குல நவீன ஸ்மார்ட்போர்டுகள் (interactive smartboards) மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தியோ தெரிவித்தார்.

கூலாய் மாவட்டத்திலேயே 830 மாணவர்களுடன் மிகப் பெரிய தமிழ்ப் பள்ளியாக விளங்கும், கூலாய் பெசார் தமிழிப் பள்ளிக்கு 2 ஸ்மார்ட்போர்டுகளும், லாடாங் கெலான், லாடாங் கூலாய் ஆயில் பாம் மற்றும் செடெனாக் ஆகிய தமிழிப் பள்ளிகளுக்கு தலா ஒரு ஸ்மார்ட்போர்டும் வழங்கப்பட்டுள்ளன.

தனது வருகையின் போது, கல்வி அமைச்சின் 43 லட்சம் ரிங்கிட் நிதியுதவியுடன் கூலாய் பெசார் பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய 3 மாடி கட்டடப் பணிகளையும் தியோ பார்வையிட்டார்.

தரைத்தளத்தில் திறந்தவெளி மண்டபமும், மேல் தளங்களில் எட்டு வகுப்பறைகளும் கொண்ட இந்த புதிய கட்டடம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பள்ளியிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.